சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு சூர்யா கார்த்தி இரு மகன்களும் பிருந்தா என்ற மகளும் உள்ளனர். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார். கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன.
ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1965-ம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். தொடர்ந்து ‘கந்தன் கருணை,’ ‘துணிவே தோழன் உட்பட பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார். பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். சுமார் இருநூறு படங்களில் நடித்துள்ள அவரது அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், சிந்து பைரவி உட்பட பல படங்கள் அவரது புகழைச் சுமந்து நிற்கின்றன.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
