செய்தி - செ.துஜியந்தன்
படங்கள் - மேகரூபன் மற்றும் துஜியந்தன்
கிழக்கில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் பதினாறம்நாள் திருவிழாவில் பாண்டவர்கள் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லும் நிகழ்வு பாண்டிருப்பில் 04.10.2017 அன்று நடைபெற்றது.
மகாபாரதத்தில் சகுனியின் சதியினால் சூதாட்டத்தில் நாடு, நகர், மனை என அத்தனையும் கௌரவர்களிடம் இழந்த பாண்டவர்கள் வனவாசம் செல்கின்றனர். இச் சம்பவத்தைக் குறிக்கும் வகையில் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் வனவாச நிகழ்வு நடைபெறுகின்றது.
இதன் போது தருமர் வீமரிடம் வாள்மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. தருமரிடம் வாள் பெற்றுக்கொள்ளும் வீமர் பாண்டிருப்பு ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தில் கட்டப்பட்டுள்ள கொத்துச் செடிகளை ஓடிச் சென்ற பறித்து வந்து திரௌபதையிடம் கொடுக்கின்றார்.
அந்தக் கொத்துச் செடியில் முல்லை, முசுட்டை, காரை, கானாந்தி, பிரண்டை எனும் ஐந்து வகை இலைகளைகள் உள்ளது. இந்த ஐந்து இலைகளும் மோட்ச இலைகளாகும் எனச்கூறப்படுகின்றது.
இவ் வனவாசத்தின்போது வீமன் தனது கண்ணில் தென்படும் இடங்களிலுள்ள வாழைக்குலைகளை வெட்டி வீழ்த்துவதும், பழங்கள், காய்வகைகளை வெட்டி வீழ்த்துகின்ற நிகழ்வு இடம்பெறுகின்றது. இது போரின்போது நல்லவர்களும் செத்து மடிவதை உணர்த்துகின்றது. அங்கே சத்தியம் சங்கமிப்பதை அது காட்டுகின்றது.
இதே போன்று நற்பிட்டிமுனை பிள்ளையார் ஆலயத்தில் பஞ்சபாண்டவர்கள் அமர்ந்து அங்கே உணவு பரிமாறுகின்ற காட்சியும் வனவாசத்தில் நடைபெறுகின்றது. ஐம்பூதங்களும் சாத்வீகத்தில் சங்கமிக்கும் மேன் நிலை உணர்வினை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது.
பாண்டவர்கள் சேனைக்குடியிருப்பு காளிகோவிலை அடைந்ததும் அங்கு தேவாதிகள் பெலிகள் இட்டு இரத்தம் சிந்தும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் ஆன்மாவானது சரணாகதியடைவதை குறிக்கும் அதன் பின் பாண்டிருப்பு பெரிய குளக்கட்டு பகுதியான மேட்டுவட்டை வயல் நிலப்பிரதேசம் துரியோதனின் நாடு எனக்கருதி அஞ்ஞானவாசம் செய்கின்ற நிகழ்வும் இவ் வனவாசத்தில் நிகழ்கின்றது.
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய உற்சவம் மகாபாரதத்தை அடியொற்றியதாகவே நடக்கின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.
























