துறையூர் தாஸன்.
அரச உத்தியோகத்தர்கள் காணி தொடர்பான அடிப்படை சட்ட அறிவை பெற்றிருத்தல் அவசியமானதாகும். அவ்வாறு பெற்றிருப்பின் மக்கள் மத்தியில் இருந்து வரும் காணி தொடர்பான பிணக்குகளை தீர்க்க உதவியாக இருக்கும் என அக்கறைப்பற்று ஆலயடிவேம்பு பிரதேச செயலக,பிரதேச செயலாளர் வே.ஜெகதீஸன் தெரிவித்தார்.
பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராமசேவை அதிகாரிகள் உள்ளிட்ட முன்னணி அதிகாரிகளுக்கு,காணி அடிப்படைச்சட்ட அறிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு,அம்பாறை மாவட்ட பெண்கள் வலயமைப்பின் ஏற்பாட்டிலும் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் ஒருங்கமைப்பிலும் இடம்பெற்றபோது,அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,தற்காலத்தில் காணி தொடர்பான பிணக்குகளே அதிகமாகவுள்ளது.இதனால் கிராம மட்டத்தில் சமூகங்களிடத்தே நாள்தோறும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.காணி தொடர்பான பிணக்குகள் நுணுக்கமாக சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும்.கொலை உட்பட பல்வறு குடும்ப பிணக்குகளுக்கு,குடும்ப சந்ததிகளுக்கிடையே ஒற்றுமை இன்மைக்கு காணி பிரச்சினையே அடிப்படையாகவுள்ளது.
எமது உத்தியோகத்தர்கள் காணி தொடர்பான அடிப்படை சட்ட அறிவை பெற்றிருத்தல் அவசியமானதாகும்.இதன் மூலம் ஏற்படும் பிணக்குகளை ஒரளவு குறைக்க வாய்ப்பேற்படும். ஆகவே அடிமட்டத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இச்செயலமர்வை நன்கு பயன்படுத்தி கிராமத்தில் எழும் காணிப்பிணக்குகளை குறைக்க மக்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இச்செயலமர்வை முன்னாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் க.குருநாதன் வளவாளராக கலந்து கொண்டு சட்ட நுணுக்கங்களை தெளிவுபடுத்தியிருந்தார்.
அகத்தின் மாவட்ட இணைப்பாளர் த.திலீப்குமார்,அகம் இளைஞர் அபிவிருத்தி இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம்,பெண்கள் வலயமைப்பின் மாவட்ட இணைப்பாளர் பூ.கலைவாணி,திட்ட இணைப்பாளர் சி.அனித்தா மற்றும் பிரதேச செயலக காணி அபிவிருத்தி அதிகாரி த.லோஜினி ஆகியோர் கலந்துகொண்டதுடன் கிராம மட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
நாற்பதுக்கு மேற்படட்ட சமூக கீழ் மட்ட அதிகாரிகளும் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.