ஒரு இந்தோனீசிய கிராமத்தில் ஒரு பிரும்மாண்ட மலைப் பாம்புக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே நடந்த சண்டையில் அந்தப் பாம்பு தோற்று இறந்தது. பிறகு, அந்த மலைப் பாம்பை கிராம மக்கள் வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று சுமத்ராவின் பட்டங் கன்சால் மாவட்டத்தில் உள்ள பாமாயில் தோட்ட சாலையில், இந்த மிகப்பெரிய மலைப்பாம்பை பாதுகாவலர் ராபர்ட் நபாபன் பார்த்துள்ளார்.
26 அடி நீளமுள்ள அந்த பாம்பைப் பிடிக்க நபாபன் முயற்சித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. பாம்பு அவரைத் தாக்கியுள்ளது. சில கிராம மக்கள் உதவியுடன் நபாபனும் அதைத் திருப்பித் தாக்கினார். கடைசியில் பாம்பு இறந்துவிட்டது.
நபாபேன் கடும் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். நபாபன் போல இந்தப் பாம்பு அதிர்ஷ்டசாலியல்ல. கிராம மக்கள், பாம்பைத் துண்டு துண்டாக வெட்டி, வறுத்துச் சாப்பிடுவதற்கு முன்பு பாம்பின் உடல் கிராமத்தில் தொங்கவிடப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் ஒரு இந்தோனீசிய கிராமவாசி, மலைப்பாம்பின் வயிற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட ஒரு வினோத சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
