மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள எருவில் கிராமத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணொருவரின் கழுத்தில் கத்தி வைத்து அவரது தாலிக்கொடியை அபகரிக்க முற்பட்ட திருடன் அப்பெண் எழுப்பிய அபயக்குரலை அடுத்து தப்பியோடியுள்ளான். இதனையடுத்து அப்பிரதேச இளைஞர்கள் குறித்த திருடனை வலைவீசி தேடியபோது வீடு ஒன்றில் மறைந்திருந்த போது அவனை பிடித்து நையப்புடைத்தனர்.
இச்சம்பவம் இன்று (24.11.2017) வெள்ளிக்கிழமை பி.ப.3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. எருவில் பிராதான வீதியிலுள்ள வீடொன்றில் குறித்த பெண் குசினிக்குள் தேநீர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் உள் நுழைந்த திருடன் அப்பெண்ணின் வாயை கையால் பொத்திக்கொண்டு மறுகையால் கத்தியை கழுத்தில் வைத்து அவரது தாலிக்கொடியை அறுக்க முற்பட்டுள்ளான்.
இப்போராட்டத்தில் திருடனை தள்ளிவிட்டு வீதிக்கு ஓடிவந்த பெண் அபயக்குரல் எழுப்பியள்ளார். அதனையடுத்து ஒன்று கூடிய பிரதேச இளைஞர்கள் திருடனை தேடியுள்ளனர். இதன்போது எதிர் வீட்டில் மறைந்திருந்த நிலையில் திருடனை கண்டு பிடித்தவர்கள் நையப்புடைத்த பின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர். குறித்த திருடனிடமிருந்து கத்தி ஒன்றும் குறடு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்