எண்ணிக்கையில் குறைவாக இருக்கின்றவர்களை இரண்டாம் தர பிரஜைகளாக அடிமைப்படுத்துகின்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என, மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் மண்முனைப்பற்று கோட்டத்திற்குட்பட்ட புலமைப் பரிசிலில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வு கிரான்குளம் சீன்மூன் மண்டபத்தில் இடம்பெற்றபோது, கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் கண்ணீர் சிந்துவதென்பது கவலைப்படுவதென்பது துன்புறுத்தப்படுவதென்பது இந்த நாட்டிற்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை ஏற்படுத்திவிடாது, அந்த வகையில் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கெதிராக பெரும்பான்மை மக்களால் காலியில் ஏற்படுத்தப்பட வன்முறை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
முற்போக்காக சுயாதீனமாக சிந்திக்கின்ற, இந்த நாட்டை நேசிக்கின்ற எவரும் ஒரு சமூகம் பாதிக்கப்படுகின்ற வன்முறைகளை, நாங்கள் சந்தோசமாக ஏற்றுக்கொள்ள முடியாது, எனவே இப்படியான செயற்பாடுகள் எந்த மாவட்டத்திலும் இடம்பெறக்கூடாது.
நல்லாட்சி என்பது நல்ல சாட்சியாக இருந்தால் இப்படியான வன்முறைகள் தவிர்க்கப்பட்டு எதிர்காலத்தில் சகல மக்களும் சமத்துவமாக சம வாய்ப்புடன் வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கக்கூடிய விதத்தில் நல்லாட்சி அரசின் ஆட்சி இயந்திரம் செயற்பட வேண்டும்.
இடைக்கால அறிக்கை என்பது ஒரு முடிவான அறிக்கையல்ல, அதற்கு பின்னரும் இடைக்கால அறிக்கையில் திருத்தங்கள் மாற்றங்கள் செயப்பட்டு தமிழ் மக்களுக்கு உகந்த அறிக்கையாக,அரசியல் யாப்பாக இருக்கின்ற பட்சத்தில்தான் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும். அல்லாதுவிட்டால் இந்த திட்டத்தினை அரசு நிறைவேற்ற முடியாது என்ற கட்டம் வருமாக இருந்தால் மக்கள் தீர்ப்புக்கு விடப்பட்டு தோல்வியடைய செய்யப்படுமாக இருந்தால், உள்நாட்டு ரீதியாக அரசியல் பிரச்சினையை தீர்க்க முடியாது என்ற செய்தியை வெளிநாட்டவர்களுக்கு சொல்ல வேண்டி ஏற்படும்.
மக்களுக்கு விருப்பமில்லாத எங்களது அபிலாசைகளை தீர்க்க முடியாத அரைகுறையான, சுய நிர்ணய உரிமைகளை இழக்கக்கூடிய தீர்வுகளை எங்களுடைய தலைமையும் கட்சியும் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளாது என்றார்.
சஞ்சயன்