நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் மகளிர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சுவாட்டின் அணுசரணையில், பால்நிலை சார் வன்முறைகளை தடுப்பது தொடர்பான சமூக மட்ட கலந்துரையாடல், பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில், கலாசார மத்திய நிலையத்தில், இன்று (23.11.2017) இடம்பெற்றது.
பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்,சிறுவர் மகளிர் தொடர்பான சமூக மட்ட பிரச்சினைகள், தலைமை தாங்கும் பெண் குடும்பங்களின் அன்றாட சவால்கள், சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதில் பொலிஸார் மற்றும் சமூக மட்ட குழுக்களின் ஒத்துழைப்புகள்,சிவில் குழுக்களின் பங்களிப்புகள், பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினரின் பொறுப்புகள்,நுண்கடனை தேவைக்கேற்ப பெற்று முறையாக செலுத்தும் முறைமை,குடும்ப முகாமைத்துவம், கிராம மட்ட மருத்துவ மாதுக்களின் பொறுப்புகள், சமுக மட்ட நிறுவனங்களது தேவைகள் ஆகிய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பொலிஸ் பிரிவு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவு, சமூக சேவைப் பிரிவு,கலாசார பிரிவு, செயலக சிறுவர் மகளிர் பிரிவு ஆகிய உத்தியோகத்தர்களும் அம்பாறை மாவட்ட பெண்கள் வலயமைப்பு, முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, சமூக மட்ட மகளிர் அமைப்புகள், மகளீர் சங்கங்கள் ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
துறையூர் தாஸன்