ஒரு நூலைப் புரட்டிப்பார்த்து படிப்பதில் இருக்கும் இன்பம் முகநூலைத் தட்டிப்பார்க்கும் போது கிடைப்பதில்லை. இன்றை நவீன தொழில் நுட்ப யுகத்தில் நின்று நிதானித்து யோசித்து வாசித்து வாழ்க்கையை வளமுடன் வாழ்வதற்க்கு எவருக்கும் பொறுமையும் நேரமும் இல்லாமல் போய்விட்டது.
இன்றைய இளையதலைமுறையினர் பேஸ்புக் சுமை, வட்ஸ்அப் சுமை, வைபர் சுமை, ஐ.எம்.ஓ சுமை, வைபை சுமை, இன்டர்நெற் சுமை என பல்வேறு சுமைகளுடனே பொழுதினைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு காலத்தில் நூலகங்கள் அறிவை வளர்க்கும், பொழுது போக்கும் இடமாக இருந்தது. நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை நண்பர்களாக்கி கொண்ட பலர் சிறந்த எழுத்தாளர்களாக உருவான வரலாறுகள் பல உண்டு.
இன்று நூலகங்கள் உறங்கு நிலையங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. மாணவர்களதும், மக்களினதும் நேரத்தை கைத்தொலைபேசிகள் விழுங்கிக் கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும்.
இந்நாட்டில் அரசாங்கம் ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு தினங்களுக்கு ஒதுக்கியுள்ளதுடன் அவை தொடர்பான விழாக்களையும் நடத்திவருகின்றது. அந்தவகையில் ஒக்டோபர் மாதத்தை வாசிப்பு மாதமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தி அது தொடர்பான நிகழ்வுகளை ஒரு மாத காலத்திற்கு முன்னெடுக்கின்றது. ஒரு நிகழ்வினை ஒரு மாத காலத்திற்க்கு பிரகடனப்படுத்தியுள்ள தினம் என்றால் அது வாசிப்பு மாதமாகத்தான் இருக்க முடியும். அந்தளவிற்கு வாசிப்பின் மகத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
நூலகம் என்ற ஒன்றை முதன் முதலில் நிறுவியவர்கள் யார் என்ற கேள்வி உங்கள் முன் எழுந்தால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளில் ஒன்றைத்தான் கூறுவீர்கள். ஆனால் பண்டைய காலங்களில் மெசப்படோமியர்கள் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஈராக்கியர்கள் தான் உலகில் முதன் முதலில் நூலகம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
இப்போது முகநூலுக்குள் மூழ்கிக்கிடக்கும் நண்பர்களே வாருங்கள் நூலகம் எப்படி பிறந்தது என்ற கதையை கொஞ்சம் விரிவாகச் சொல்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் நின்று நிதானித்து படித்து விட்டுச் செல்லுங்கள்.
ஒரு நூல் நிலையத்தை உருவாக்க எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் எதிர்காலத்தில் இங்கு நூல் நிலையங்களை அரும்பொருட்காட்சி நிலையங்களில் தேடவேண்டிய காலம் வந்தாலும் வரலாம். தற்காலத்தில் சினிமாத் தியேட்டர் வாசலில் அலைமோதும் கூட்டத்தில் நான்கில் ஒரு பகுதி கூட நூல் நிலையம் நோக்கி ஒதுங்குவது இல்லை. அந்தளவிற்கு நூல் நிலையங்கள் உறங்கு நிலையங்களாக மாறிக் கொண்டிருக்கின்றது.
பண்டைய மெசப்படோமியப் பிரதேசம் என்பது தற்போதைய டைகிரிஸ் மற்றும் யுபிரட்டஸ் ஆகிய ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பாகும். முன்பு மெசப்படோமியா என்ற ஒரே பெயரால் அழைக்கப்பட்ட கண்டம் தற்போது ஈரான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக் கண்டத்தில் குறிப்பிடத்தக்க நான்கு பேரரசுகளாக விளங்கியவை சுமேரியா, பாபிலோனியா, அசிரியா மற்றும் அக்காத்தியர் ஆகும். மிகவும் புகழ் பெற்ற நாகரீகங்களாக உலகம் அடையாளம் கண்ட பாபிலோனியா மற்றும் சுமேரியா போன்ற நாகரிகங்கள் இங்கிருந்து பிறந்ததுதான்.
ஏறத்தாழ 3300 ஆண்டுகளுக்கு முன்பு அசிரியப் பேரரசின் நிர்வாகத்துறையில் ஏற்பட்ட குறுபடிகளை களைய அப்போதைய அசிரியப் பேரரசின் அரசரான சென்னாசெர்ப் (கி.மு.1300 – 1200) அரசாங்கத்தின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் களிமண் தகடுகளில் எழுதி அவற்றை சூளைகளில் சுட்டு காயவைத்து பாதுகாப்பான இடங்களில் பத்திரமாக வைக்கும் படி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள், அரசாணைகள், அரசாங்கக் கடிதங்கள், அரச உளவாளிகளிடம் இருந்து பெறப்படும் உளவு அறிக்கைகள் அரசு நிர்வாகத்துறையின் கீழ் வரும் முக்கிய ஆவணங்கள் போன்றவை களிமண் தகடுகளில் எழுதி சூளைகளில் சுட்டு அரசு கருவூலங்களிலும் சில கோவில் கருவறைகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாளடைவில் உயிர்காக்கும் மருத்துவக் குறிப்புக்கள், சமய நூல்கள் போன்றவையும் எழுதி பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
அசிரியப் பேரரசின் கடைசி அரசரான அகர்பானியல் (கி.மு.700 – கி.மு.600) இக் களிமண் தகடுகளின் எண்ணிக்கை முப்பதாயிரத்தையும் தாண்டியது. அத்தனையையும் வெவ்வேறு இடங்களில் வைத்து பாதுகாப்பது சிரமமாக இருந்த காரணத்தினால் அனைத்தையும் அசிரியாவின் (தற்போது ஈராக்) தலைநகரான நினிவாஹ் (Nineveh) தற்போது மொசூல்;(mosul) ஒன்றிணைத்து அவற்றை துறைவாரியாகப் பிரித்தெடுத்து அடுக்க உத்தரவிட்டார். இதன்படி ஒவ்வொரு களிமண் தகடுகளும் துறைவாரி ரீதியாக பிரித்து அடுக்கி பொதுமக்கள் பார்வைக்கு என்று விடப்பட்டது. இதுதான் உலகில் அமைக்கப்பட்ட முதல் நூலகம் ஆகும். இந்த நூலகம் (the royal library of ashurbanipal) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. எனினும் பெரும்பாலான தகடுகள் அரசாங்க ஆவணங்களாகத்தான் இருந்தன.
இந்த நூலகத்தைப் பற்றி தற்செயலாக கேள்விப்பட்ட அலெக்ஸாண்டர் (கி.மு.356 – கி.மு.323) நேரில் சென்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து ashurbanipal நூலகத்தை போல் அல்லது அதனைக் காட்டிலும் பிரம்மாண்டமான ஒரு நூலகத்தைக் கட்டவேண்டும் என்ற எண்ணம் அவருள் தோன்றியது. எகிப்தியர்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதிவந்த அந்தக்காலத்தை அலெக்ஸாண்டர் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டார்.
இதனை தொடர்ந்து எகிப்திலுள்ள அலெக்ஸாண்ரியா நகரில் இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன. உலகம் முழுவதிலும் கல்வி, கலை, இலக்கியம். கணிதம். அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் இருந்து சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை கிரேக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பாப்பிரஸ் தாள்களில் எழுதப்பட்டது.
இப் பணிகள் தொடங்கிய சிறிது காலத்திலேயே அலெக்ஸாண்டர் இறந்து போனாலும் அலெக்ஸாண்டரின் நெருங்கி நண்பரும் அப்போதைய எகிப்தின் அரசருமான தலாமி (Ptolemy i305282bc) முன்னின்று பணிகளை மேற்பார்வையிட்டு நிறைவு செய்தார். இறுதியாக கி.மு.300இல் எகிப்தின் அலெக்ஸாண்ட்டரின் நகரில் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான பாப்பிரஸ் தாள்களைக் கொண்ட முதல் பொது நூலகம் அமைக்கப்பட்டு the royal library of alexandriஎன்று பெயரிடப்பட்டது.
அதன் பிறகு ஒக்ஸ்போட்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் நூலகத்தின் பயன்பாடுகளை அறிந்து தங்களது பல்கலைக்கழக வளாகங்களிலேயே நூலகங்களை நிறுவத் தொடங்கின. அதன் பிறகு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக நூலகங்கள் பல்வேறு மாற்றங்களையும் சந்தித்து தம்மை வளர்த்துக்கொண்டு ஒரு புதிய பரிணாமத்தை அடைந்தன. என்பதே இதன் வரலாறாகும்.
செ.துஜியந்தன்