இப் பூமியில் பாவ சாபத்தில் மூழ்கியிருக்கும் மனிதர்களின் பாவ இருளை அகற்றிடவே ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவதரித்தார்! கோட்டக்கல்விப்பணிப்பாளர் வி.திரவியராஜா தெரிவிப்பு.
இயேசு கிறிஸ்து 2017 ஆண்டுகளுக்கு முன்பதாக இப் பூமியில் மனிதனாகப் பிறந்தவர். இவர் மனிதராகப் பிறந்தாலும் மனித ரூபமெடுத்து மனிதர்களின் பாவத்தை இல்லாதொழிக்க அவனியில் பிறந்த கடவுள் என கிறிஸ்தவம் கூறுகின்றது. இப் பூமியில் வாழும் மனிதர்கள் அனைவருமே பாவ, சாபத்தில் மூழ்கி, கடவுளோடு உள்ள உறவை இல்லாமலாக்கி ஆண்டவரை விட்டு விலகி வாழ்ந்து வந்தனர். இந்த பாவ இருளை அகற்றி ஆண்டவரோடு இணைந்து வாழும் தன்மையை ஏற்படுத்தும் உன்னதநோக்கத்தை நிறைவேற்றும் ஒளியாகக் கிறிஸ்து பிறந்தார். நானே மெய்யான ஒளி என்று தன்னைக்கூறும் கிறிஸ்து அந்த மெய்யான ஒளியின் பிரகாசத்தினாலே மனிதனின் பாவ இருளை அகற்ற முடியும் என்று கூறுகின்றார்.
குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் ஒளி விழா நிகழ்வுகள் அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.திரவியராஜா கலந்து கொண்டார். சிறப்பதிதிகளாக ஓந்தாட்சி மடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலய அதிபர் பி.புண்ணியராஜா, மகிழுர் சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர் என்.புட்பமூர்த்தி, எருவில் கண்ணகி மகா வித்தியாலய அதிபர் எஸ்.பரமானந்தம், கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலய அதிபர் கே.பிரபாகரன், மகிழுர்முனை சக்தி வித்தியாலய அதிபர் ரி.தேவராஜன் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக கல்லாறு மெதடிஸ்த திருச்சபை அருட்சகோதரி செல்வி ஜோதினி சீனித்தம்பி போதகர், மண்டூர் விடுதலை திருச்சபை அருட்சகோதரர் எம்.பிலிப் மகேஸ்வரன், கல்லாறு மாரநாதா திருச்சபை அருட்சகோதரர் எழில் பிரகாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து பேசிய கோட்க்கல்விப் பணிப்பாளர் வி.திரவியராஜா....
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து 600 வருடங்களுக்கு முன்பதாகவே ஏசாயா எனும் தீர்க்கதரிசி கூறியிருந்தார். எனவே மக்களை மீட்க அவர்களை ஆளும் இராஜாவான இயேசு கிறிஸ்து ஒரு இராஜமாளிகையில் இளவரசனாக பிறப்பார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆண்டவர் இயேசு ஏழைக்கோலமெடுத்து, தாழ்மையின் ரூபமாக தன்னைத் தாழ்த்தி ஒரு மாட்டுக கொட்டிலிலே பிறந்தார்.
பெருமை கொள்ளாமல், கீழ்ப்படிவு, பணிவு, தாழ்மை, மன்னிப்பு மற்றவர்மேல் அன்பு செலுத்துதல் போன்ற மனிதசமூதாயத்திற்கு அவசியமான வாழ்க்கை முறையினை மிகவும் ஆழமாகவும், உதாரணத்தோடும் போதித்த ஓர் உத்தமர். இவரை அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமை மிக்கவர், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்று தீர்க்கதரிசி சொல்லியிருந்தார்.
மனிதர்கள் இன்று சமாதானமில்லாமல் பல்வேறு பிரச்சினைகலோடும், சண்டைகளோடும் வாழ்ந்து வருகின்றனர். எனவேதான் நிலையான சமாதானத்தைக் கொடுக்கின்ற இறைவனாகக் கிறிஸ்துவைப் போற்றுகின்றனர். இவரது பிறப்பின் நேரம் பரலோகத்திலிருந்து உரைக்கப்பட்ட வார்த்தையாக எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டு பண்ணும் நற்செய்தி என்று அமைந்தது.
இதன் மூலம் உலகமக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும் நல்ல செய்தியாக கருதப்பட்டது. மக்கள் துக்கத்தோடும் கண்ணீரோடும் வாழ்ந்து வந்ததினால் அவர்களுக்கெல்லாம் சந்தோஷத்தைக் கொடுக்கும் செய்தியாக இயேசுவின் பிறப்பு அமைந்திருந்தது.
எனவேதான் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் ஒளி விழாவாக கொண்டாடுகின்றனர். இதன் மூலம் அனைத்து மக்களும் அவரது பிறப்பின் நோக்கத்தை அறிய வாய்ப்புக்கிடைப்பதோடு ஒருவரோடொருவர் புரிந்துணர்வோடும் ஜக்கியமாகவும் சந்தோஷம், சமாதானத்துடன் வாழவும் மனித வாழ்க்கையும் எதுவித சஞ்சலமின்றி அமையவும் வழிபிறக்கும் எனக்கருதி இதனைக்கொண்டாடுகின்றனர் என்றார்.
செ.துஜியந்தன்
செ.துஜியந்தன்