மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பிரணவம் ஆன்மிக சோதி பண்பாட்டு இதழ் வெளியீட்டு விழா மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் உதவும் கரங்கள் நிறுவனத்தின் மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக விவசாயபீடம் பீடாதிபதி கலாநிதி க.பிறேமகுமார் கலந்து கொண்டார். ஆன்மிக அதிதியாக யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஸ்ரீ முத்துமாரியம்மன் பிரதமகுரு சிவஸ்ரீ சி.கிருபாகரக்குருக்கள் கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி, காணிநிர்வாகம்,மனிதவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்குப்பல்கலைக்கழக இந்து நாகரிகம் விரிவுரையாளர் திருமதி சாந்தி கேசவன், மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் ஆகியோரும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியங்களின் குருமார்கள், நிறுவனங்களின் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
பிரணவம் நூல் பற்றிய அறிமுக உரையினை கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி நிர்மலேஸ்வரி பிரசாந்த், நூல் விமர்சன உரையினை விரிவுரையாளர் த.விவேகானந்தராசா ஆகியோர் நிகழ்தியிருந்தனர். நூலின்ஏற்புரையினை பிரணவம் நூலாசிரியர் வி.ரமணிஐயா நிகழ்த்தினார்.
இங்கு நூல் அறிமுகவுரையாற்றிய விரிவுரையாளர் திருமதி நிர்மலேஸ்வரி பிரசாந்த்.......
இவ் உலகத்தின் மூலமந்திரமாக ஓம் எனும் பிரணவ மந்திரம் உள்ளது. இவ் மந்திரமே மொழிகள் எல்லாவற்றுக்கும் மூலமாகும். புpரணவம் என்ற பெயரைத்தாங்கி வருகின்ற இவ் ஆன்மிக சோதிட பண்பாட்டு இதழ் தற்காலத்தில் ஆன்மிக தேடல் கொண்ட மக்கள் இப்பாதைக்கு எவ்வாறு செல்வது? யார் வழிகாட்டப்போகின்றார்கள் என்ற சூழ்நிலையில் இந்து சமயத்தவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இந் நூல் அமைந்துள்ளது.
இந்து சமயத்தவர்களை வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பு குருமார்களுக்கு இருக்கின்றது. அக் கடமையினை அவர்கள் சரிவரச்செய்கின்றார்களா? என்ற கேள்வியெழுகின்றது? ஆன்மிகம் சார்ந்து பாடசாலைகளில் எடுக்கப்படுகின்ற முயற்சிகளும் மிக மிக குறைவாகவேயுள்ளது. இதேபோன்று பல்கலைக்கழக மட்டத்திலும் மாணவர்கள் தமது கல்வியாண்டை எப்படியாவது பூர்தி செய்தால் போதும் என்கிற ஓட்டத்திலே ஒடுகின்றார்கள். இதனால் ஆன்மிகத்தினை நிலைநிறுத்துவது என்பது பூச்யசியமாகவே யுள்ளது.
ஆன்மிக பாதைக்கு மனிதர்களை இட்டுச்செல்வதில் ஊடகங்களின் பங்கு அதிக செல்வாக்குச் செலுத்துகின்றது. இளைஞர் சமூதாயம் ஊடகங்களிலே மூழ்கியிருக்கின்றது. இந் நிலையில் கிழக்கிலிருந்து பிரணவம் எனும் ஆன்மிக சோதிட பண்பாட்டு இதழ் வேதாரண்யம் தர்மகர்த்தா பரம்பரையைச்சேர்ந்த ரமணி ஐயாவினால் வெளியிடப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
பல்வேறு சமூகத்தாக்கங்களினால் மன அழுத்தங்களுக்குட்பட்டு இருக்கும் மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்க்கு ஆன்மிகமே சிறந்த வழியாகும். அதனை இவ் பிரணவம் இதழ் நிறைவேற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அழகிய அட்டைப்படத்துடன் 18 அம்சங்களைத் தாங்கிய வண்ணம் சமயம்சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கும் வகையில் பிரணவம் இதழ் வெளிவந்துள்ளமை ஆன்மிக தேடலுள்ள மக்களுக்கு நிச்சயம் வழிகாட்டும் என்றார்.
செய்தி செ.துஜியந்தன்








