கிழக்கு கரையோரத்தில் மக்கள் மத்தியில் இன்று (15.11.2017) புதன்கிழமை மு.ப. 10 மணியளவில் ஏற்பட்ட சுனாமி பீதி காரணமாக கரையோரத்திலிருந்த மக்கள் அல்லோல கல்லோலப்பட்டனர்.
இன்று காலையில் வழக்கத்தைவிட மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் காலைவேளையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் மக்கள் மத்தியில் சுனாமி பற்றிய அச்சம் தொற்றிக்கொண்டது. வீதிகளில் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து பி.ப.10 மணியளவில் திடீரென மக்கள் மத்தியில் சுனாமி பற்றிய பீதி தொற்றிக்கொண்டது. சில இடங்களில் கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு சென்றிருந்த தங்களது பிள்ளைகளை பெற்றோர் அவசர அவசரமாக அழைத்து வந்தனர். மட்டக்களப்பு, கல்முனை பிரதேசங்களில் பாடசாலைகள் நேரத்துடன் கலைக்கப்பட்டன. இங்குள்ள அரசவங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வழமையான செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டன. வீதிகளில் வாக நெரிசல் ஏற்பட்டதுடன் விபத்துச்சம்பவங்களும் இடம் பெற்றுள்ளது. மக்களின் அல்லோல கல்லோலத்தையடுத்து திருடர்களும் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர்.
சுனாமிக்கு பயந்து வீதிக்கு ஓடிவந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை திருடர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் பாண்டிருப்பில் நடைபெற்றுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு மக்கள் தேவையின்றி அச்சப்படவேண்டாம் எனவும் சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கிழக்கில் நிலமை வழமைக்குத் திரும்பியுள்ளது.
செ.துஜியந்தன்




