முல்லைத்தீவு மாவட்டச்செயலகமும் முல்லைமாவட்டக்கலாசார பேரவையும் இணைந்து, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டிருக்கிறது முல்லைமாவட்ட கலாசாரவிழா 2017.
முல்லை மாவட்டக்கலாசார பேரவையின் தலைவராகிய முல்லைமாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களது தலைமையில் 14.12.2017 அன்று, மாவட்டச்செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் மேற்படி நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் அவர்கள் கலந்து சிறப்பிக்க இருந்தபோதிலும், வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி அபிராமி பாலமுரளி அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினராக, முல்லைமண்ணின் மைந்தராகிய ஐக்கியநாடுகள் சபையின் மேற்கு ஆபிரிக்காவிற்கான முகாமைத்துவ நிபுனர் திரு விஜயகுமார் நவநீதன் அவர்கள் கலந்துகொண்டார்.
நிகழ்வின் ஆரம்பத்தில், அலங்கரிக்கப்பட்ட முல்லைநகர் கடற்கரைப்பகுதியிலிருந்து கோலாகலமாக கலாசாரப்பண்பாட்டு அம்சங்களுடன் ஊர்திகள் விழா மண்டபம் நோக்கி நகர்ந்தன.
நந்திக்கடலோரம், நாயாற்று நீரோரம், வட்டுடை பனையுடை வெட்டுவாகலருகில், இயலோடு அலையாடும் பெருங்கடலோரம், இதமான காலநிலையினூடே கரகம், கும்மி, கோலாட்டம்.. மயிலாட்டம், ஒயிலாட்டம், கண்டிய நடனத்துடன், பெரியவர்கள் மண்டபத்தினுள் அழைத்துவரப்பட்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் மேடை நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.
தமிழ்த்தாய் வாழ்த்தினை முள்ளியவளை சங்கீத ஆசிரியர்கள் இசைத்தனர்.
வரவேற்பு நடனத்தினை முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரி மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை மேலதிக மாவட்டச்செயலாளர் திரு.பிரணவநாதன் அவர்கள் நிகழ்த்தினார்.
மேடை நிகழ்வுகளை.. மேலதிக மாவட்டப்பதிவாளர் திரு கோபி அவர்களும், மாவட்டச்செயலக உத்தியோகத்தர் செல்வி மியூறி அவர்களும் திறம்படத்தொகுத்து வழங்கினர்.
பண்பாட்டுப் பேரவையின் தலைவராகிய அரச அதிபர் தனது தலைமையுரையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைகள் மற்றும் தொன்மங்கள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
சிறப்புரையில் திரு. நவநீதன் அவர்கள், முல்லைமாவட்டத்தின் வளங்கள் தொடர்பாகவும், கல்விவளர்ச்சி தொடர்பாகவும் தரவுகளோடு குறிப்பிட்டிருந்தார்.
கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தைகிழக்கு, வெலியோயா ஆகிய பிரதேசங்களிலிருந்து ஒவ்வொரு மூத்தகலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான கௌரவங்கள் வழங்கப்பட்டன.
இக்கலைஞர்களுக்கு, கலைஞர்களுக்கான முல்லைமாவட்டத்தின் அதியுயர் விருதான
'முல்லைக்கலைக்கோ' விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இக்கௌரவிப்பு நிகழ்வினை ஒட்டுசுட்டான் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் எஸ்.எஸ் மோகன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.
வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்த நேரத்திற்குள் நடந்துமுடிந்திருந்தன. குறிப்பிடத்தக்களவு இளவயதினரின் பங்களிப்புக்கள் காணப்பட்டிருந்தமை, இம்மாவட்ட விழாவினை அடுத்த கட்டத்திற்கு வீச்சோடு நகர்த்துவதற்கான அறிகுறியாகும்.
கவிஞர் புரட்சியும் கௌரவிக்கப்பட்டார்..
அண்மையில் ஆயிரம் கவிதைகளை ஒருங்கிணைத்து நூலாக்கி வெளியிட்டமைக்காகவும் அவரது கவிச்செயற்பாட்டைக் கவனத்திலெடுத்தும், மாவட்டக்கலாசாரபேரவை அவருக்கான கௌரவத்தினை வழங்கியிருந்தது.
மேடை நிகழ்வுகளாக, வற்றாப்பளை ஆலய நிர்வாகத்தினர் ஒழுங்குசெய்துதந்த மங்கள இசைமுழக்கம், முள்ளியவளை வித்தியானந்தாக்கல்லூரி மாணவர்களின் வரவேற்புநடனம், சிவன்சக்தி பரதம், பின்னல்க்கோலாட்டம், வெலியோயாக்கலைஞர்களின் நடனம் என்பனவும் அரங்கேறின.
அரங்கதிர்ந்த கவியரங்கம். கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரும் சிறந்த இலக்கிய ஆர்வலருமாகிய திரு குணபாலன் அவர்களது தலைமையில் முல்லைக்கவிஞர்களின் கவியரங்கமும் அரங்கேறியது.
மற்றும்.. மாந்தைகிழக்கின் வில்லுப்பாட்டும், புதுக்குடியிருப்பின் கரகமும், கரைதுறைப்பற்றின் சேரன்செங்குட்டுவனும் அரங்கச்சுவைஞரது மனங்களைக் குளிர்வடையச்செய்தன.
உண்மையில்.. முல்லை மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசசெயலாளர்களின் பங்களிப்பு கனதியானது. கலைஞர்கள் மற்றும் வளங்களை ஒருங்கிணைப்பதில் அதீத ஆர்வம் காட்டியிருந்தனர். அவர்கள் போல் உதவி பிரதேசசெயலாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பணியாளர்களது ஒத்துழைப்புகளும் கிடைத்திருந்தன.
விசேடமாக.. மாவட்டச்செயலகத்தினர் விருப்புடன் விழா நாத்துவதில் முன்னின்று செயற்பட்டனர். மேலதிக மாவட்டச்செயலாளர், பிரதம கணக்காளர், கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், திட்டமிடல்ப்பணிப்பாளர், சமுர்த்தி ஆணையாளர், நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் பணியாளர்களும் இம்மாவட்ட நிகழ்விற்காக தமது பூரண ஒத்துழைப்பினைத் தந்திருந்தார்கள்.
விழாவிற்கான பால் மற்றும் சிற்றுண்டிகளை ஊரவர்கள் வழங்கியிருந்தனர். பண்பாட்டு ஊர்திகளையும் கிராமமக்களே அலங்கரித்து, வேடம் புனைந்து நகர்த்தியுமிருந்தனர்.
கலைஞர்களை ஏற்றியிறக்குவதற்கான வாகன ஒழுங்குகளை மாவட்டச்செயலகம், வித்தியானந்தாக்கல்லூரி, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி என்பன செய்திருந்தன.
நகர அலங்காரங்களை நகர வர்த்தக சங்கத்தினர், ஆட்டோசங்கத்தினர் செய்துதர, பொலிஸாரும் பிரதேசசபையினரும் தமது ஆதரவினையும் தந்திருந்தனர்.
விழா ஒழுங்கமைப்பினை மாவட்டக்கலாசார உத்தியோகத்தர் செல்வி மதியரசி ஒழுங்கமைத்தார்.
நன்றியுரையினை, கலாசாரப் பேரவைசார்பாக ஆசிரியர் முல்லைத்தீபன் நிகழ்த்தியதும் தேசிய கீதத்துடன் விழா நிறைவுகண்டது.
- வே. முல்லைத்தீபன் -








