பிரதேச சபை செயலாளர் எம்.இராமக்குட்டி.
சமூக வலைத்தளங்களிலிருந்து கற்றுக்கொள்வதை விட புத்தகங்களிலுள்ளதை கிரமமாக வாசித்து கிரகித்தல் ஊடாக பெறுகின்ற அறிவே நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் என நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.இராமக்குட்டி தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் பொது நூலகத்தினால்,பிரதேச மாணவர்கள் மத்தியில் போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள்,பரிசில்கள் வழங்கும் நிகழ்வில்(05) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலக தரிசன நிறுவன பிராந்திய பணிப்பாளர் ரீ.பிரேமச்சந்திரன்,சனசமூக அலுவலர் வி.ரீ.சுந்தரலிங்கம் ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
அவர் மேலும் தொடர்ந்துரையாற்றுகையில்,இளமையிலேயே வாசிப்பு பழக்கத்தை பாடசாலை சமூகமும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அதற்கான சூழலையும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
வாசிகசாலைகளை ஆக்கபூர்வமாக முறையாக பயன்படுத்தும் போதே அதை எதிர்காலத்தில் நூலகங்களாக தரமுயர்த்த முடியும்.தேசிய நூலக ஆவணவாக்கல் சுற்று நிருபத்தின் படி எடுத்த உடனே நூலகமாக ஆக்க முடியாது.வாசிகசாலைகளிலேயுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கை,வாசிகசாலை பிராந்தியத்திலுள்ள சனத்தொகையில் ஆகக் குறைந்தது எட்டு வீதமாக இருக்கும்போதே அவ் வாசிகசாலைகளை நூலகங்களாக தரமுயர்த்தலாம்.
வாசக அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமே வாசிகசாலை ஊடாக நூலகம் தரம் -lll ஐ அமைக்க முடியும்.சனசமூக நிலையங்கள் முறையாக இயங்கப்படும்போதே நூலகங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.ஆகவே பாடசாலை மாணவர்கள் மற்றும் வாசகர்கள் சனசமூக நிலையத்தினை இயங்க வைத்து வாசிகசாலையை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு சனசமூக நிலையங்களும் வாசிகசாலைகளை சிறப்பாக நடாத்துவதுடன் வாசிகசாலையிலே இருக்கின்ற அங்கத்தவர்களை அதிகரித்து நூலகங்களை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும்.
நூலகத்தினை முழுமையாக பயன்படுத்தி வாசிப்பு மாத நிகழ்வுகளில் பங்குகொண்டு திறம்பட செய்யும்போது கல்வியமைச்சின் தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் திறன்விருதுகளை ஒவ்வொரு வருடமும் பெறுவதுவதென் மாணவர்களினதும் சனசமூக நிலையங்களினதும் கைகளிலேயேயுள்ளது என்றார்.

