இன்று இலங்கை தமிழ் மக்கள் சர்வதேசத்தின்
பார்வையில் பலவாறாக பார்க்கப்பட்டு வருகின்றனர். இன்றைய முக்கியமான பிரச்சனை
என்னவென்றால் தமிழ் மக்களின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்க
தொழில்வாய்ப்புக்கள், தனியார் தொழில்
வாய்ப்புக்கள் தவிர பெரும்பாலான மக்கள் விவசாயம், மீன்பிடி தொழில்களையே நம்பி இருக்கின்றனர். அவற்றில் வியர்வை
சிந்தியும் வெயிலில் கஸ்டப்பட்டும் சராசரி வருமானத்தை கூட அவர்களால் பெற
முடிவதில்லை. இதனால் கூடுதலாக இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி மத்திய கிழக்கு
நாடுகளை நோக்கி செல்கின்றார்கள். கடன் வாங்கி செல்கின்றவர்கள் அந்த கடனை அடைக்கவே
குறிப்பிட்ட காலம் செல்கின்றது. பின்னர் வீட்டுக்காக மூன்று அல்லது நான்கு
வருடங்கள் உழைக்கின்றவர்கள் திரும்ப நாட்டுக்கு வருகின்ற பொழுது பெரிதாக அவர்கள்
கையில் முதலீடு என்று ஒன்றும் இருப்பதில்லை. மறுபக்கம் விவசாயம், மீன்பிடி என்பவற்றிலே உழைக்கின்ற சொற்ப மேலதிக பணத்தையும் கொண்டு
உடைகள் இதர பொருட்களை வாங்குவதற்காக நகருக்கு வருகின்ற மக்களுக்கு விலைகள்
கூடுதலாக வழங்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள். அத்துடன் நகைகளை வங்கிகளில் இவர்கள்
அடகு வைப்பதும் குறைவு. வேறு இடங்களில் அடகு வைத்து குறுகிய காலத்தில் அவற்றை
இழக்கிறார்கள்.
ஆண்கள் மத்திய கிழக்கு செல்வதால் கலாச்சார
சீர்கேடுகளும் கூடுதலாக இடம்பெறுகின்றன. இங்குள்ள தமிழ் முதலீட்டாளர்கள் இவற்றில்
அக்கறை காட்டுவது குறைவு. கூடுதலான பணத்தினை வங்கியிலேயே முடக்கி விடுகின்றனர்.
வளங்களும் வசதிகளும் இங்குள்ள நிலையில் வேறு முதலீட்டாளர்கள் வந்து இங்குள்ள
பொருளாதாரத்தினை எடுத்துச் செல்கின்றார்கள்.
மாணவப் பருவத்திலேயே பகுதிநேர தொழில்களை செய்யும்
அறிவு வளர்க்கப்பட வேண்டும். உயர்தரம் முடித்த பின்னர் தொழிலுக்கான முயற்சிகள்
பற்றி அவர்கள் சிந்திப்பதற்கு இரண்டு மூன்று வருடங்களை செலவழிக்கிறார்கள்.
கைவினைப் பொருட்கள் மற்றும் தங்கள் திறமைகளை சந்தைப்படுத்தும் அறிவு இயல்பாகவே
தமிழர்கள் பெறுவதில்லை.
ஆக
இனிவரும் காலங்களில் தமிழர்கள் வியாபார
நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடவேண்டும். அதுவே காலத்தின் தேவையாகும்.
