திருக்கோயில் இல்மனைட் அகழ்வினால் பாரிய ஆபத்தும் மக்கள் அழிவடைதலும் தொடர்பான பொதுக்கூட்டம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில்,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் நேற்று மாலை (12.12.2017) இடம்பெற்றது.
திருக்கோயில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஸ்.மோகனகாந்தன்,டாக்டர் தமிழ்தாஸன்,ஜனாதிபதியின் அமைப்பாளர் வீ.விக்கினேஸ்வரன் ஆகியோரும் இதன்போது கலந்து கொண்டனர்.
இல்மனைற் ஆலையிலிருந்து வெளியேறும் இரும்பு குளோரைடு மற்றும் அமிலக்கழிவுகள் சுற்றியுள்ள நிலத்தையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தல்,ஆலையில் பிரித்தெடுக்கப்படும் ஜிர்க்கான் கனிமம் கதிரியக்கத்தன்மையை கொண்டியிருப்பதால் ஆலையை சுற்றி இருபது கிலோ மீற்றர் தூரத்துக்குள் வாழும் மக்களும் உயிரினங்களும் மரபணு நோய்களுக்கும் பல்வேறு வகை புற்றுநோய்களுக்கும் ஆளாகுதல்,திருக்கோயில் தம்பிலுவில்,வினாயகபுரம்,உமிரி பகுதியிலுள்ள வானுயர வளர்ந்துள்ள தென்னைகள் அழியும் ஆபத்துகுள்ளாகுதல்,நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல்,நிலத்தின் மீதுள்ள தாவரங்கள் அகற்றப்படுவதனால் வெப்பம் நேரடியாக பூமியைத்தாக்குவதுடன் அருகாமைக் கடலிருந்து வெளிவரும் குளிர் காற்று வெப்பமடைவதனால் உள்ளூர் மழையின் அளவிலும் தன்மையிலும் மாற்றமடைதல்,கடலருகாமையில் இருப்பதனால் நிலத்தடியில் கடல் நீர் புகுவதனால் குடிப்பதற்கு நீர் துப்பரவற்று இருத்தல் ஆகிய பல்வேறு பிரச்சினைகள் மற்றும் இல்மனைற் அகழ்வின் ஆபத்துக்கள் போன்றன பொதுமக்களால் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட இவற்றை எதிர்த்து போராட பொதுமக்கள் ஒன்று சேரவேண்டும் என பிரதேச சங்கங்கங்களின் கருத்துக்கமைய,பாரிய கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தை இம்மாதம் 27 ஆம் தேதி காலை திருக்கோயில் மணிக்கூட்டுக்கோபுரம் முன்பாக நடத்துவதற்கான தீர்மானம் பொது அமைப்புகளால் இதன்போது நிறைவேற்றப்பட்டது.
சஞ்சயன்.





