தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் பிறப்பு இந்த உலகிற்கு அறிவிக்கப்பட்டது ஒரு மதத்தைச்சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல இங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகவே அறிவிக்கப்பட்டது. உலகில் பாவ இருளில் வாழும் மக்களை மீட்கவும் அவர்களை இரட்சிக்கவுமே இயேசுகிறிஸ்து மண்ணுலகில் அவதரித்தார்.
இவ்வாறு மட்டக்களப்பு கல்லாறு சேகர முகாமைக்குரு அருட்சகோதரி செல்வி சீனித்தம்பி ஜோதினி தெரிவித்தார். குருமண்வெளி மெதடிஸ்த பாலர் பாடசாலை மாணவர்களின் ஆண்டு விழாவும், ஒளிவிழா நிகழ்வும் குருமண்வெளி மெதடிஸ்த தேவாலயத்தில் நடைபெற்றது. இங்கு கிறிஸ்தவ தேவலாயங்களில் பணிபுரியும் அருட்சகோதர்கள், அருட்சகோதரிகள் எனப்பலர் கலந்துகொண்டனர். அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்லாறு சேகர முகாமைக்குரு அருட்சகோதரி செல்வி சீனித்தம்பி ஜோதினி மேலும் கூறுகையில்.....
இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் நேரம் பரலோகத்தலிருந்து உரைக்கப்பட்ட வார்த்தையாகும். எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டுபண்ணும் நற்செய்தி என்று அமைந்தது. இதன் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்கும் நல்ல செய்தியாக கருதப்பட்டது.
மக்கள் துக்கத்தோடும், கண்ணீரோடும் வாழ்ந்ததினால் அவர்களுக்கெல்லாம் சந்தோஷத்தை கொடுக்கும் செய்தியாக இயேசுவின் பிறப்பு அமைந்திருந்தது. இதனாலே கிறிஸ்தவகர்கள் இயேசுவின் பிறப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் ஒளிவிழாவாக இதனைக் கொண்டாடுகின்றனர்.
இங்குள்ள சின்னஞ்சிறார்கள் தங்களது ஆற்றல்களை இங்கு ஒப்புவிக்கின்றார்கள். முன்பள்ளிப்பருவத்திலேயே அவர்களின் கல்விக்கான, ஆளுமைக்கான அத்திவாரம் இடப்படுகின்றது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டு அதற்கேற்றால் போல் அவர்களை வழிநடத்தவேண்டும் என்றார்.
செ.துஜியந்தன்






