தேவைப்பட்டது..! கிடைத்திருக்கிறது..!
துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்தினரால் அவர்தம் மாணவ சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு பொ.இரவிச்சந்திரன் அவர்களது தலைமையில் மேற்படி நிகழ்வு 5.12.2017 அன்று வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வடமாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் திருமதி செல்வின் இரேனியஸ் அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக மாங்குளம் மக்கள் வங்கி முகாமையாளர் திருமதி சிவகலா சிவபாலன் அவர்கள் கலந்துகொண்டார்.
இரண்டு அமர்வுகளாக இந்நிகழ்வுகள் நடைபெற்றன. காலை 9.00 மணிக்கு விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டதைத்தொடர்ந்து தேசியக்கொடி மற்றும் வலயக்கொடியேற்றப்பட்டதன் பின்னர் கீதமிசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
☆ காலை அமர்வு
பொதுப்பரீட்சைகளில் வெற்றியீட்டிய மாணவர்களும் தேசியரீதியிலான சாதனையாளர்களும் காலையமர்வில் கீழ்க்கண்டவாறு கௌரவிக்கப்பட்டனர்.
• கடந்த 2016/2017 ல் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புலமைப்பரிசில்ப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்.
• 2016 ல் க.பொ.த சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்.
• தேசியமட்டத்திலான வெற்றியாளர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள்.
• கடந்த 2017 ல் பல்கலைக்கழகங்களிற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள்.
☆ மாலை அமர்வு
மாலை அமர்வானது பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகியதுடன், வலயமட்டப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் கீழ்க்கண்டவாறு கௌரவிக்கப்பட்டனர்.
• ஒவ்வொரு துறைகளாகத் தெரிவு செய்யப்பட்டு கௌரவங்கள் வழங்கப்பட்டன. ஆரம்பக்கல்வி, செயற்பட்டுமகிழ்வோம், விசேடகல்வி, ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், தகவல்த்தொழில்நுட்பம், சமூகவிஞ்ஞானம், வர்த்தகம், சமயம், விவசாயம் மற்றும் மனையியல் என்பதாக அத்துறைகள் அமைந்திருந்தன.
உண்மையில் சிறப்பான ஒழுங்குபடுத்தல்களுடன் குழப்பமற்ற வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் விருப்புடனும் உணர்வுடனும் எம்பிள்ளைகளை அணுகியவிதங்கள் பார்ப்போரை மிகவும் கவர்ந்திருந்தன.
வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவித சாந்தமான மகிழ்வுடன் காணப்பட்டார். தனது காலத்தில் இச்சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வினை முதன்முதலாக துணுக்காய் வலயத்தில் ஆரம்பித்து வைக்க வேண்டும் எனும் பெரு விருப்புக்கொண்டவர். அதனை தனது பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களினூடாக நடாத்தியுமிருக்கிறார்.
அவர் தனதுரையில்.. எம்பிள்ளைகளுக்கான பாராட்டுக்கள் தொடர்ச்சியாகத் தேவைப்படுகிறது எனவும், இதனாலேயே பிள்ளைகளை போட்டிகளில் பங்குபெறவும் அவர்களை சாதனையாளர்களாகவும் வளர்க்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் இந்நிகழ்வில் கூடிய கவனமும் அக்கறையும் எடுத்திருப்பதனை அவதானிக்க முடிந்தது. பிள்ளைகளின் கைகளைப்பற்றி, ஆத்மார்த்தமாக அவர்களை அணைத்து பாராட்டுக்களை வழங்கியதையும் காணக்கிடைத்தது.
பிள்ளைகள் இவர்களை 'அதிகாரிகள்' எனும் நிலையிலேயே எப்பொழுதும் பார்ப்பார்கள். ஆனால் இவர்களால் பொதுவில் அரங்கமைத்து பிள்ளைகள் பாராட்டப்படும்பொழுது சின்னவர்களுக்கு இன்னுமின்னும் கூடிய ஆர்வம் ஏற்படும். எதிர்வருங்காலங்களில் விருப்புடன் போட்டிகளில் பங்கெடுக்கவும் வெற்றிபெறவும் ஆசைப்படுவார்கள். எமக்கும் எமது பிள்ளைகளுக்கும் தேவைப்படுவதெல்லாம் பொருத்தமான அங்கீகாரமும் பாராட்டுதல்களுமேயாகும். அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைத்திருக்கிறது.
அலுவலக உத்தியோகத்தர்கள் தமக்கான பொறுப்புக்களை திறமாகச் செய்திருக்கிறார்கள். கதிரையடுக்கி அரங்கை ஒழுங்குபடுத்தியது தொடக்கம் சிற்றுண்டிகள் மற்றும் மதிய உணவுகளை வழங்கியது வரை அத்தனையையும் கவனமாகப் பார்த்திருந்தனர்.
பெறுமதிமிக்க இந்நிகழ்விற்கு தமது பிள்ளைகளை பக்குவமாக அழைத்துவந்த அதிபராசிரியர்கள் முகங்களில், பிள்ளைகளோடிணைந்து தாங்களும் சாதித்தமையினை வெளிப்படுத்தி நின்றனர். குழந்தைகளோடு தாங்களும் அங்குமிங்குமாக துருதுருவென நடந்துதிரிந்ததனையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
தொடர்சியாக போர்ச்சூழலையும் வறுமையினையும் காரணம் காட்டியபடி பிள்ளைகளின் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் தடைபோடாத.. இப்பேற்பட்ட பாராட்டுக்களும் கௌரவங்களும் தொடர்ச்சியாகவே தேவையென்பதை கலந்துகொண்ட பலரும் பேசிக்கொண்டார்கள்.
வாழ்த்துக்கள்..
பெரும் சாதனைகளுக்கான எத்தனமிது..!
- முல்லைத்தீபன் வே



