செ.துஜியந்தன்
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சவளக்கடை பூமரத்தடிச் சந்தியில் அமைந்துள்ள சுயம்புலிங்கம் மற்றும் காளி அம்மன், பிள்ளையார் படங்கள், உண்டியல் உட்பட அனைத்தும் புதன்கிழமை அதிகாலை வேளையில் இனந்தெரியாத விஷமிகளால் திருடப்பட்டுள்ளது.
சவளக்கடை பூமரத்துச்சந்தியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தை அகற்றுமாறு கோரி நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் முகைதீன்பாவா நவாஸ் என்பவர் சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து சவளக்கடை பொலிஸார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இவ் வழக்கு எடுத்துக்கொள்ளப்ட்டிருந்தது. இதனை விசாரித்த நீதவான் ஐ.என் றிஸ்பான் அது வீதி அபிவிருத்திற்குட்பட்ட இடமாகும்.. அவ் வழிபாட்டுத்தலத்தை அகற்ற உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு கிடையாது என அறிவித்திருந்தார்.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை இவ் உத்தரவு வெளிவந்த நிலையில் புதன்கிழமை அதிகாலைவேளையில் குறித்த ஆலயத்தில் இருந்த சிவலிங்கம், காளி அம்மன், பிள்ளையார் சுவாமி படங்கள் மற்றும் உண்டியல் என்பன இனந்தெரியாதவர்களினால் திருடப்பட்டுள்ளது.
இன்று பௌர்ணமி நாள் பூசை செய்வதற்காக வருகை தந்த மக்கள் ஆலயத்தில் சிவலிங்கம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தெடர்பில் பிரதேச அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கும் மக்கள் கொண்டு சென்றுள்ளனர். பிரதேசத்தில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை விரும்பாதவர்களின் செயற்பாடே இது என புத்திஜீவிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


