அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் பாவனையை ஒழிக்கும் விசேட வேலைத்திட்டங்கள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சமந்த விஜேசேகர தலைமையிலான விசேட பொலிஸ்குழுவொன்று போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் வாங்குவோர் தொடர்பில் இரகசிய தகவல்களை பெற்று அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் போதைப்பொருட்பாவனை தொடர்பிலான விழிப்புணர்வு நடவக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பாவித்த மற்றும் விற்பனை செய்தவர்கள் என 2437 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதில் ஹேரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 68 பேரிடம் இருந்து 2543 மில்லிகிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ் வருடத்தின் பெப்ரவரி மாத்தில் மட்டும் ஹேரோயின் வைத்திருந்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் 2564 மில்லிகிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோல் கஞ்சா வைத்திருந்த 116 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். சம்மாந்துறை பொலிஸ்பிரிவிலே அதிகூடிய கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் போதை ஒழிப்பு விசேட பிரிவுகள் அமைக்கப்பட்டுவருகின்றன. இதன் மூலம் மாணவர்கள், சிவில்பாதுகாப்பு குழுக்கள், ஆலய நிர்வாகங்கள் ஊடாக தகவல்கள் பெறப்பட்டு விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சாமந்தவிஜயசேகர தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தை போதைப்பொருள் பாவனையற்ற மாவட்டமாக கட்டியெழுப்ப பொதுமக்ள் அனைவரும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
