அகில இலங்கை ரீதியில் கரகாட்டக் கலையில் முத்திரை பதித்த கிழக்கிலங்கையின் முதல் மகன் மட்டக்களப்பு துறைநீலாவணையைச் சேர்ந்த கலாபூஷணம் கந்தையா சோமசுந்தரம் இன்று அதிகாலை காலமானார்.
மட்டு மாவட்டத்தின் தென் எல்லைக் கிராமமான துறைநீலாவணையில் கந்தையா கண்ணகையின் சிரேஷ்ட புதல்வரான இவர் கிழக்கு மாகாண ஆளுனர் விருது உட்பட இன்னும் பல தேசிய விருதுகளை கரகாட்டக் கலைக்காக பெற்றுக்கொண்டவர்.
தனது தலையில் கரகாட்டச் செம்பினை எந்தவிதமான உறுதிப்பாடுமின்றி தலையில் வைத்து நிலத்தில் வீழ்ந்தும் எழுந்துப் பல்வேறு அங்க அசைவுகளை காண்பித்தும் ஆடி வருகின்ற பெரும் கலைஞர். அருகி வரும் தமிழர் கரகாட்டக் கலையினை வளர்த்தெடுத்த பெருமையும் இவரையே சாரும். இவரின் கரகாட்டக் கலையினை மறைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி, இன்று எங்களோடு வாழும் பேராசிரியர் சி.மெளனகுரு போன்ற பல பெருமக்கள் வியந்து பாராட்டியுமுள்ளனர்.
தமிழ் மக்களின் முக்கிய ஆலயமாக திகழும் கதிர்காம கத்தன் ஆலயம், நல்லூர் கந்தசுவாமி ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் ,அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயம், நகுலேச்சர ஆலயம் என நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்களில் தனது கரகாட்ட கலையினை நிரூபித்த பெருமகனாவார்.
அன்பாக பழகுவதிலும் அவயடக்கம் கொள்வதிலும் தனக்கு நிகர் எவரில்லை என்று வாழ்ந்த பெருமகன்.
கிழக்கிலங்கைக்கு கரகாட்ட பெருமையின் மூலம் அன்னாரின் சேவைகளை பாராட்டியவர்களில் மட்டு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் வேல்முருகு சண்முகம், இந்து கலாசார அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் உள்ளிட்டோர் நன்றிக்குடையவர்களாகும். இவர் ஊடகவியலாளர் பல்முறைக் கலைஞர் பாக்கியராசா மோகனதாசன் பாட்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது
-துறையூர் தாசன்-
