கிழக்கு மண்ணில் கரகாட்டம் மூலம் புகழ் புத்த கலைஞர் கலாபூஷணம் கந்தையா சோமசுந்தரம் வியாழக்கிழமை இயற்கை எய்தினார். இவரது இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஆனைகட்டியவெளியிலுள்ள அவரது இல்லத்தில் ; நடைபெற்று சின்னவத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
1941 ஆம் ஆண்டு துறைநீலாவணை கிராமத்தில் பிறந்த கரகாட்டக்கலைஞர் சோமசுந்தரம் தனது 12 வயதில் இருந்து கிராமியக் கலையான கரகாட்டம் மூலம் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்திருந்தார். இவர் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல கிராமங்களக்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் திருவிழாக் காலங்களில் கரகாட்டம் ஆடி மக்களை மகிழ்வித்துள்ளார்.
அத்துடன் கரகாட்டக் கலையினை இளம் தலைமுறையினருக்கு பயிற்றுவிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்தார். இவரது கலைச்சேவையினை பாராட்டி கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வித்தகர் விருது வழங்கி கௌரவித்தள்ளது. மேலும் மத்தியரசாங்கத்தினால் வழங்கப்படும் கலாபூஷணம் விருதையும் பெற்றுள்ளார்.
கரகாட்டக் கலைஞர் கலாபூஷணம் கந்தையா சோமசுந்தரம் சுகவீனம் காரணமாக தனது 78 ஆவது வயதில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச்சடங்கில் கலைஞர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். ஒன்பது பிள்ளைகளின் தந்தையான இவர் இறக்கும் வரை கரகாட்டத்தையே தனது மூச்சாகக்கொண்டு வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்
ReplyForward
|
