இலங்கையிலுள்ள மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு மாகாணங்களே கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
"அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய வேலைத்திட்டத்திற்கமைய சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) கல்வியமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி வகுப்பறைக்கட்டிடம், தொழில்நுட்ப பீடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவற்றின் திறப்பு விழா பாடசாலை அதிபர் ஏ.சீ.ஏ.மொகமட் இஸ்மயில் தலைமையில் நேற்று(23) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளை அடித்து உடைத்து எத்தனையோ கல்விமான்களை கொன்றழித்த கடந்த கால அரசாங்கம் செய்த அநியாயத்தினாலேயே எட்டாவதாக வடக்கும் ஒன்பதாவதாக கிழக்கும் கல்வியிலே பின்தள்ளப்பட்டிருக்கின்றது.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் வலி வடக்கில் யாழ் மாவட்ட பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் எத்தனையோ பாடசாலைகள் தரைமட்டமாக்கப்பட்டு இராணுவ முகாம்கள், அரண்கள் அமைக்கப்பட்டுள்ளது. கல்வியிலும் விளையாட்டிலும் மாவட்டத்திலிருந்து மாகாணத்திலிருந்து தேசியத்திலிருந்து எப்படி இவ்வாறான நிலையின்போது மாணவர்கள் சர்வதேசத்துக்குப் போக முடியும். கடந்த கால அரசாங்கமே கல்வி ரீதியில் எங்களை முடக்கியிருக்கின்றது. நாங்கள் அதை மாற்றியமைக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றோ ம்.
பாடசாலைகளுக்கான வளங்கள், கல்வி உபகரணங்கள், கட்டிடங்கள் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரிய மாணவர் புலமைப்பரிசில் என்பன
இயற்கை, செயற்கை அனர்த் தத்தினால் தொடராக பாதிக்கப்படும் வடகிழக்கு பாடசாலைகளுக்கு தேவையான நிலையிலுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இலவச கல்வி, பாடநூல், சீருடை, சப்பாத்து என்பவற்றுடன் கட்டாயம் 1 தொடக்கம் 13 வரைக்கும் பாடசாலை செல்லவேண்டும் உயர்தரம் படிக்க வேண்டும் என்ற நோக்குடன் 26 தொழிற் கற்கைகளை அறிமுகப்படுத்தி பாடசாலை ரீதியாக நடைமுறைப்படுத்தி, வேலையில்லா பட்டதாரிகள் வீதியில் நிற்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளோம்.
வடகிழக்கிலுள்ள தேசிய பாடசாலைகள், மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பல தடவை விஜயம் செய்தபோது மலசலகூடத் தேவை, ஆசிரியர் தேவை, கட்டிடத் தேவை கேட்போர்கூடத் தேவைகள் என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்நிலை எதிர்வரும் காலங்களில் நிவர்த்தி செய்யப்படுவதற்கான ஆயத்தங்களை மேற்க்கொண்டிருக்கின்றோம். இப்பாடசாலையின் நீண்டகால கேட்போர் கூடத் தேவை கல்வியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு இவ்வருடத்திற்குள் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெறும்.
வேறு மாகாணங்களை எங்களுடைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது அவைகள் எங்கேயோ அபிவிருத்தியடைந்து உச்சத்திற்கு சென்றிருப்பதனை காண முடிகின்றது. ஆனால் எங்களுடைய மாகாணங்கள் கல்வி, பெளதீகவளம் ,ஆளணி என எந்த இடத்திலேயும் கவனிக்கப்படாத நிலையிலேயே இருந்திருக்கின்றது.
வடக்கு கிழக்கு மலையகம் உட்பட நாடளாவிய ரீதியில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதனால் கூடிய விரைவில் இதற்கான தீர்வுகள் எட்டப்படும் நிலையிலுள்ளது. கடந்த கால அரசாங்கத்தில் எத்தனையோ அதிபர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் அரசியல் பழிவாங்கலுக்குள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கான தேசிய, சர்வதேச வெளிநாட்டு புலமைப்பரிசிலில் படிப்பதற்கு எங்களுடைய ஆட்சியிலேயே தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார் கள்.
கடந்த காலங்களில் எங்களுடைய அதிகாரிகளின் வெற்றிடங்களுக்காக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நிரப்பப்பட்டு அவ் வெற்றிடங்களில் அவர்கள் இருப்பதனாலேயே எங்களுடைய தமிழ் முஸ்லிம் அதிகாரிகளுக்கு அப்பாக்கியம் இல்லாமல் இருந்தது. இன்றுதான் நல்லாட்சி ஐக்கிய தேசிய முன்னனி அரசாங்கம் வந்ததென் பின்னரே படிப்படியாக உரிய தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றோம்.
பெற்ற பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது என்பது போல கல்விச் சொத்தை மாத்திரமே எங்களால் வளர்க்க முடியும். அதை முன்னெடுப்பதற்கு அனைத்து மக்கள் பிரதிநிநிகளிடமிருந்தும் உத்தியோகத்தர்களிடமிருந்தும் பூரண ஆதரவை எதிர்பார்க்கின்றோம் என்றார்.
-தாசன்-

