கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் பொன். செல்வநாயகத்தை கல்முனை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியதாக இம்மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி ஏ. எம். றஹீப்புக்கு எதிராக இதே நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பொன். செல்வநாயகம் மேற்கொண்ட முறைப்பாட்டின் பெயரில் வழக்கு நடவடிக்கை மேற்கொண்ட கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் குற்ற பத்திரத்தை தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற அழைப்பாணையை அடுத்து மேயர் றஹீப் ஆஜராகி கோர்ட்டை கழற்றி விட்டு எதிரி கூண்டில் தோன்றினார். இவரை ஆதரித்து சட்டத்தரணிகளான அன்ஸார் மௌலானா, மனாருதீன், பிறேம் நவாத், முஹைமீன், சன்சீர் ஆகியோர் ஆஜாரானார்கள். பொலிஸார் சம்பவம் குறித்து பூரண விசாரணை நடத்தாமல் குற்ற பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக இவர்கள் பூர்வாங்க ஆட்சேபனை முன்வைத்தனர். நீதிவான் ஐ. என். ரிஸ்பான் இது தொடர்பாக பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் கட்டப்படுகின்ற இந்து ஆலயத்தை அகற்ற இந்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி மேயர் றஹீப் செய்த வழக்கை பார்வையிட்டு விட்டு திறந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய பிற்பாடு முதல்வரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் கூட்டுக்குள் போடுவார் என்று முதல்வர் அச்சுறுத்தியதாகவும் பொன். செல்வநாயகத்தால் முறையிடப்பட்டு உள்ளது.
காரைதீவு நிருபர்
