எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க உறுப்பினராக இருந்து இருக்கவில்லை என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராசா தெரிவித்தார்.
புஷ்பராசா புலிகள் இயக்க உறுப்பினர் என்றும் இவரால் கிழக்கில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்தார் என்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக நாம் வினவியபோது புஷ்பராசா நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தவை வருமாறு.
நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்து இருக்கவில்லை. அதே போல கிழக்கில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவே இல்லை. நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி சார்பாக நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளராக பதவி வகித்தேன். பிற்பாடு அரசியல் சூழ்நிலைகள் காரணமாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு மகத்தான வாக்குகளை பெற்று முதலாவது கிழக்கு மாகாண சபைக்கு தெரிவானேன்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா - நாமல் குமார ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக என்னை குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸார் என்னை நாலாம் மாடிக்கு அழைத்து விசாரித்தபோதும் நான் புலி உறுப்பினர் அல்லர் என்று தெளிவூட்டி இருந்தேன்.
தமிழன் என்கிற காரணத்தால் புலி முத்திரை குத்தி என்னை மாட்டி வைக்க முயற்சிக்கின்றனர் என்று விளங்குகின்றது. ஆலையடிவேம்பு கால்நடை பாலுற்பத்தி விவசாய கூட்டுறவு சங்க செயலாளராக நான் உள்ளேன். அந்த வகையில் வட்டமடு மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவே துஷார பீரிஸ், நாமல் குமார ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு சந்தித்து பேசினர். வட்டமடு மேய்ச்சல் தரை பிரச்சினை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலானது அல்ல. கால் நடை வளர்ப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலானது. மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்ட அந்த நிலம் கால் நடை வளர்ப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஓங்கி குரல் கொடுத்து வருகின்றேன்
கால்நடை வளர்ப்பாளர்களில் கணிசமான முஸ்லிம்களும் உள்ளனர். ஆனால் வட்டமேடு மேய்ச்சல் தரை பிரச்சினையின் பின்னணியில் நான் முஸ்லிம்களுக்கு விரோதமானவன் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டி விடுகின்றேன் என்றும் குறுகிய சுய இலாப சக்திகள் கட்டு கதைகளை கட்டவிழ்த்து விட்டு உள்ளன. வட்டமடு மேய்ச்சல் தரையை மீட்க கால் நடை வளர்ப்பாளர்கள் சாத்வீக வழிமுறைகளையே கையாண்டு வருகின்றோம்.
2020 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்குகின்றபோது அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோர் வருகின்றபோது அவர்களை பாதாள உலக தலைவர் மதுஸ் மூலமாக படுகொலை செய்து விட்டு பழியை புஷ்பராசா மீது போடுவது என்று நாலக டி சில்வா, நாமல் குமார ஆகியோர் தொலைபேசியில் பேசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரைதீவு நிருபர்
