கிழக்கின் புகழ்பூத்த கரகாட்டக் கலைஞர் கலாபூஷணம் சோமசுந்தரம் ஐயாவின் இறுதி ஊர்வலம் இன்ற வெள்ளிக்கிழமை ஆனைகட்டியவெளியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து சின்னவத்தை பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்;பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட எனது மனப்பதிவினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
கரகாட்டக் கலைஞர் சோமசுந்தரம் ஐயா வசதியான கலைஞர் அல்ல. வறுமையின் துயரப்பின்ணனியைக் கொண்ட ஒரு திறமையான கலைஞர். அவர் குடியிருந்த வீட்டையும், குசினியையும் பார்க்கும் போதே அவர் வாழந்த வாழ்க்கையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
கரகாட்டம் ஆடி மற்றவரை மகிழ்வித்த இந்தக் கலைஞனுக்கு கரம் கொடுத்துதவ எவரும் முன்வரவில்லையே என நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது!
இன்று நல்ல வசதியோடு வாழ்கின்ற செல்வமும், செல்வாக்கும் உள்ள சுமார் திறமை கொண்ட கலைஞர்களுக்கே பகட்டும், பாராட்டுப்பத்திரமும், விருதும் வழங்கிகௌரவித்து சாமரம் வீசுகின்ற போலியான கலை உலகில் நாம் சஞ்சாரித்துக் கொண்டிருக்கிறோம்.
வறுமையில் பிறந்து, வறுமையில் உழன்று திறமைகாட்டும் எந்தக் கலைஞர்களையும் எவரும் கண்டு கொள்வதில்லை. அப்படி யாராவது கண்டாலும் பேருக்கு ஒரு 600ரூபாவுக்கு ஒரு பொன்னாடை, 100ரூபாவுக்கு ஒரு பாராட்டுப்பத்திரம், 400ரூபாவுக்குள் ஒரு நினைவுச்சின்னம் வழங்கிவிட்டு தங்களைப்பீத்திக் கொள்கின்ற போலிகளையே நாம் காண்கின்றோம்.
மறைந்த கரகாட்டக் கலைஞர் சோமசுந்தரம் ஐயா வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றிலுள்ள சைவவழிபாட்டுத்தலங்களுக்குச் சென்று தலையில் செம்பு வைத்து, கையில் வேப்பிலைபிடித்து சிலநேரங்களில் தீச்சட்டி ஏந்தியும் கரகாட்டம் ஆடி இறைஆசீ பெற்றுவந்தவர்.
இவரை 2016 இல் பாண்டிருப்பு தீப்பள்ளயக்கோவிலில் கண்டு கலந்துரையாடி இருக்கிறேன. அவர் என்னிடம் சொன்னது..
இப்ப எங்க தம்பி இந்தப் பொடியனுகள் கரகம் ஆடப்போறானுகள். கரகம் பழக்குறன் வாங்கடா எண்டு கூப்பிட்டா நிண்ட எடத்துக்கும் தெரியாம ஓடுறானுகள். வெட்கமாயிருக்காம் எண்டு சொல்லுறானுகள். கலைக்கு வெட்கப்படக்கூடாது. எனக்குப் பிறகு இந்தக் கரகத்தை கோயில்களில யாரு ஆடப்போறாங்கலோ தெரியாது என்றார்.
ஒரு சிறந்த கரகாட்க் கலைஞரை இங்குள்ள எவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. சோமசுந்தரம் ஐயாவின் வறுமையும், எளிமையும் அவரை உயரத்துக்கு கொண்டுபோக கை கொடுக்கவில்லையோ! தெரியவில்லை.
எத்தனையோ கலைஞர்கள் வாழ்கின்றார்கள், எத்தனையோ கலைமன்றங்கள் இயங்குகின்றன ஒருவர் கூட இக்கலைஞனின் மறைவிற்கு இரங்கல் செய்திகூட வெளியிடவில்லையே என்பதை நினைத்தால் நெஞ்சம் கன்க்கிறது.
கொஞ்சம் இரக்கம் இருந்தால் இந்தக் கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்தியுங்கள்.
