“உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள்” -எஸ்.ராமகிருஷ்ணன்
சிறுவயதில் நாம் வாசித்த புத்தகங்கள் நமக்குள்ளே நாம் மீண்டும் உணர முடியாத ஒரு அனுபவத்தை ஆழப் பதித்துச் சென்றிருக்கும். அப்போது நாம் மிகவும் நேசித்த சிறுவயது புத்தக கதைப்பாத்திரங்கள், நேற்று தான் நமக்கு அறிமுகமானவை போல இன்றும் நம் நினைவில் இருக்கக் கூடும். இப்படிச் சிறுவயதில் நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதோடு, இப்புத்தகங்கள் சில நல்ல கருத்துகளையும், நற்பண்புகளையும் சிறுவர்களுக்குள்ளே விதைத்து, அவர்களைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. சிறு குழந்தைகளுடைய அந்தத் துடிப்பான, எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளக் கூடிய இளம் மனங்களில் எது சரி, எது தவறு என்றுணரும் பக்குவத்தையும் எழுத்து வடிவில் விதைக்கின்றன.
குழந்தைகளானவர்கள் தாங்கள் எவற்றைப் பார்க்கிறார்களோ, படிக்கிறார்களோ அவற்றையே தங்களின் முன்-மாதியாகக் கொள்கிறார்கள். புத்தகங்கள், சிறுவர்களுக்கு எவ்வாறு வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்திப்பதெனக் கற்றுக் கொடுக்கின்றன; அவை அவர்களுக்கு வாழ்வியல் சாத்தியங்களை பற்றிச் சிந்திக்க ஒரு களமாக அமைகின்றன; மட்டுமல்லாமல், புத்தகங்கள் நம் முன்னோர்களின் சேகரிக்கப்பட்ட அறிவையும், அதன் மூலமாக பண்பாட்டையும், சமூக மதிப்பீடுகளையும் சிறுவர்களுக்குள்ளே புகுத்துகின்றன.
சிறுவர்களின் புலனுணர்வு வளர்ச்சி, வார்த்தைகளை வெளிப்படுத்தும் திறன், கல்வி வளர்ச்சி -இவற்றிற்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் புத்தகம் வாசிக்கும் பழக்கமுடைய குழந்தை தெளிவான வார்த்தை உச்சரிப்பை கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், மற்ற குழந்தைகளை விட அதிகமாக பகுத்தறியும் திறன், எழுத்தாற்றல் மற்றும் விமர்சிக்கும் திறன் ஆகியவற்றைப் பெறுகிறார்கள்.
இப்படியாக நம்மை நல்ல வாசிப்பாளர்களாக வார்த்தெடுத்த சிறுவர் இலக்கிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. இப்போது நாம் இருக்கின்ற இந்த இணைய உலகில், முன்பிருந்ததை விட மிக அதிகமான அளவில் சிறுவர் நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. எண்ணிலடங்கா மின்-நூல்களும், இணைய நூல்களும் உள்ளன. வெவ்வேறு சிறுவர் இலக்கிய நூலாசிரியர்கள், வெவ்வேறு கதைக்களங்கள், வெவ்வேறு விதமான கதை சொல்லும் யுக்திகள், வெவ்வேறு வாசகர்கள், வெவ்வேறு வடிவங்கள் -என காலங்கள் மாற மாற, வளர்ந்து வரும் சமூகச் சூழல்களுக்கு ஏற்ப சிறுவர் நூல்களும் பல தலைமுறைகளாக, பல மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளன. இருப்பினும் எல்லா காலத்திலும், எல்லா தலைமுறையினரும் விரும்பி வாசித்த நூல்கள் எனச் சில நூல்கள் காலத்தால் அழியா புகழோடு உள்ளன. அவற்றை நாம் Classic Children’s Literature என்கிறோம்.
எத்தனை நவீன கதைகள் பல்வேறு காலங்களில் வெளிவந்திருந்தாலும், அவை ஒருபோதும் ‘ஹக்ல்பெரி ஃபின்’–ன் சாகசங்களுக்கும், கட்டை விரல் அளவு குட்டையான ‘தம்பலீனா’-வுக்கும், வெவ்வேறு உலகங்களில் பயணித்து வந்த ‘ஆலீஸ்’-கும் ஈடாகாது. இந்த பட்டியலில் இன்னும் பல தேவதைகளும், இளவரசிகளும், சில குட்டி முயல்களும், கரடிகளும் கூட அடங்கும். இவ்வகையான போற்றத்தக்க சிறுவர்களுக்கான நூல்களைப் படைத்தவர்களில் ‘ரால்ட் டால்’, ‘எனிட் பிளைடன்’, ‘சி.எஸ்.லூயிஸ்’, ‘பீட்ரிக்ஸ் பாட்டர்’, ‘சார்லஸ் டிக்கன்ஸ்’, ‘ஆண்டர்சென்’, ‘A.A.மில்னே’, ‘மைக்கேல் பாண்ட்’, ‘E.B.வைட்’, ‘மார்க் ட்வைன்’ போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் ‘ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென்’ அவர்களுக்கு இந்நாளுக்குரிய தனிச் சிறப்பு உண்டு! அவரைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்!
நம்முடைய சுய சிந்தனைகளையும், உணர்வுகளையும், நெறிமுறைகளையும், நம் இயல்புநிலை பாதிக்காமல் பாதுகாப்பான முறையில் அந்த சிறுவர் நூல்கள் நம்முள்ளே வளர்த்தது போல வேறெந்தவொரு நிகழ்வும் செய்திருக்க முடியாது. ஆனால் இன்றிருக்கும் சூழலில் "சர்வதேச சிறுவர் நூல்கள் தினம்" போல ஏதாவதொரு தினத்தில் தான் இது போன்று சிறுவர் நூல்களைப் பற்றி விவாதிக்க முடிகிறது. வருடங்கள் இத்தனை கடந்த பின்னும், எங்காவது நூலகங்களிலோ, புத்தகக் கடைகளிலோ சிறுவயதில் வாசிக்காத ஏதேனும் சிறுவர் இலக்கிய நூல்களைக் காண நேர்ந்தால், அந்தப் புத்தகங்களை இழந்து விட்ட இளம்பருவத்தினை எண்ணி மனம் கசந்து போகிறது
செ.துஜியந்தன்
