வர உள்ள ஜனாதிபதி தேர்தலில் முடிந்தால் பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர எம். பி பகிரங்க சவால் விடுத்தார்.
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள இவர் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோரை அம்பாறை நகர சபை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் முக்கியமாக தெரிவித்தவை வருமாறு
மஹிந்த ராஜபக்ஸ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த தலைவர் ஆவார். இந்நாட்டு மக்களுக்கு அபிவிருத்தி, வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றை முன்னொரு பொழுதும் நடந்திராத வகையில் அள்ளி வழங்கியவர் ஆவார். நாம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவரின் வெற்றிக்காகவே பாடுபட்டோம். தேர்தல் நாளில் சாவடிகள் தோறும் வாக்காள பெருமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கினோம். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அவற்றை எல்லாம் கொடுத்தும் அவரால் வெற்றி அடைய முடியவே இல்லை. ஏன் தோல்வி அடைந்தார்? அவரை எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன இலஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம், குடும்ப ஆட்சி இல்லாதவர்.
மஹிந்த ராஜபக்ஸவின் செல்வாக்கு இறங்குமுகமாகவே சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளைகூட அவர்களால் மீண்டும் பெற முடியாது. முடிந்தால் பொதுஜன பெரமுன தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும். அவர்கள் அவ்வாறு தனித்து போட்டியிடுகின்ற பட்சத்தில் சுதந்திர கட்சியை காட்டி கொடுத்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வர துணை புரிவோர் ஆகி விடுவார்கள்.
நாம் மஹிந்த ராஜபக்ஸவை மதிக்கின்றோம். நேசிக்கின்றோம். ஆனால் அவருக்குத்தான் ஜனாதிபதி பதவி, பிரதமர் பதவி, எதிர் கட்சி தலைவர் பதவி எல்லாம் வேண்டும் என்றால் என்ன செய்வது? மஹிந்தவை நேசிப்பதற்காக ராஜபக்ஸக்களின் குடும்ப ஆட்சியை ஏற்று கொள்வதற்கு இல்லை என்பதை இவ்விடத்தில் வெளிப்படையாகவே சொல்கின்றேன்.
சுதந்திர கட்சியின் பொது செயலாளர் என்கிற வகையில் அவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றேன். அவ்விதம் ஒன்று சேர்கின்ற பட்சத்தில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் வெற்றி நிச்சயமானது. அதற்காக சுதந்திர கட்சியை விட்டு கொடுக்கவோ, காட்டி கொடுக்கவோ முடியாது. அதாவது வர உள்ள ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் சின்னம் தவிர்த்து வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது. அதே போல எமது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவேதான் ஆவார். அவர் உன்னதமான மக்கள் தலைவர். போதை பொருள் ஒழிப்பில் இதய சுத்தியுடன் ஈடுபட்டு வருகின்றார். இவர் போல் எந்த தலைவரும் இவ்விடயத்தில் முன்பு இவ்விதம் செயற்பட்டதும் இல்லை, இனி மேல் செயற்பட போவதும் இல்லை.
காரைதீவு நிருபர்
