மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய் யசோதா கலைவாணன்(41வயது) என்பர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரசவத்திற்காகஅனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் புதுக்குடியிருப்பு கிராமம் சோகமயமானது.
குறித்த தாய், சேய் உடலின் நல்லடக்கம் இன்று சனிக்கிழமை புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நடைபெற்றது . இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தனது மனைவியின் உயிரிழப்பு தொடர்பாக கணவன் கலைவாணன் தெரிவிக்கையில்..
உயிரிழந்த கர்ப்பிணித்தாயான யசோதா தனது பிரசவத்திற்காக கடந்த10 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 2019-04-07 ஆம் திகதியே பிரசவத்திற்கான திகதியினை இவரை பரிசோதித்த பொறுப்பு வைத்தியர் குறித்துக் கொடுத்துள்ளார். 07 ஆம் திகதி கடந்த பின்னரும் அத் தாய்க்கு குழந்தை பிறக்கவில்லை.
இதனையடுத்து கடந்த 10 ஆம் திகதி மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போதும் அவரை அங்கு பார்வையிட்ட பிரசவத்திற்கு பொறுப்பான வைத்தியரிடம் உயிரிழந்த கர்ப்பிணித்தாய் தனக்கு பயமாக இருப்பதாகவும் தனக்கு அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்குமாறும் கெஞ்சிக்கேட்டுள்ளார். பொறுப்பு வவத்தியரோ அது எனக்குத் தெரியும் அறுவைச்சிகிச்சை செய்வதா இல்லையா என்பதை நான் தான் தீர்மானிக்கவேண்டும். உனக்கு சுகப்பிரசவம் பிறக்கும் சும்மாயிரு என்று சென்றிருக்கின்றார்.
7ஆம் திகதி பிறக்கவேண்டிய குழந்தை நான்கு நாட்கள் கடந்தும் பிறக்கவில்லை என்றால் வைத்தியர்கள் சரியான முடிவை எடுத்திருக்கவேண்டும். 12ஆம் திகதி இரவு மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கின்றது. அவரை சரியாகக்கூட கவனிக்காதிருந்துள்ளார்கள்;. அதிகாலை 4.30 மணியளவில் எனது மனைவியின் உயிர் பிரிந்துள்ளது. மனைவியை பார்வையிட்ட பொறுப்பு வைத்தியரதும் அங்கு கடமையில் இருந்தவர்களினதும் கவனக்குறைவே எனது மனைவியின் உயிரிழப்புக்கு காரணம் எனத்தெரிவித்துள்ளார்.
புதுக்குயிருப்பில் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட கர்ப்பிணித்தாய்மாரின் மூன்றாவது உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. தனது மனைவியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கவேண்டும் என கணவன் கலைவாணன் கோரிக்கை விடுத்துள்ளார்.



