அதிக ஒலி எழுப்பும் ஒலியெழுப்பிகளை கட்டுப்படுத்த கடும் சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவினது தலைமையில் அண்மையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறித்த கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வாகன சட்டத்திட்டங்களை மீறுதல் மற்றும் டெஸிபல் 105க்கு அதிகமான ஹோர்ன் தொடர்பாக தேவையான சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வலிறுத்தப்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சூழல் மாசடைதலின் ஒரு அம்சமான ஒலி மாசடைதலை தடுக்கவும் எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த ஒழுக்கமான நாட்டை உருவாக்கவும் எடுக்க வேண்டிய குறுகிய கால நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளன.
இது தவிர நாட்டின் அனைத்து பாடசாலை மாணவர்கள், அனைத்து பயணிகள் மற்றும் சாரதிகளை இணைத்து அமைதியான தினமொன்றை பிரகடனப்படுத்துவது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
