இந்நாட்டில் வாழும் அனைவரும் இன், மத, குல, பேதமின்றி ஒற்றுமையாக வாழந்து இனங்களுக்கு இடையே பிரிவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளை தோற்கடிக்கவேண்டும். இந் நாட்டில் பிரிவினைக்கோ மதவாத்திற்கோ இடமளிக்கப்டாக்கூடாது. உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களை செய்தவர்களுக்கு எதிராக இன, மத வேறபாடுகளுக்கு அப்பால் தண்டனைவழங்கப்படவேண்டும்.
இவ்வாறு கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹாவிகாரையின் சங்கைக்குரிய ரன்முதுகல சங்கரட்ணதேரர் தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்..
கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழலால் இங்குள்ள மக்கள் அனைவரும் மிகுந்த துயரங்களைச் சந்தித்திருந்தோம். யுத்தம் முடிவடைந்த பிற்பாடு நாம் அனைவரும் இன், மத, வேறுபாடுகளைக் களைந்து ஒருதாய் பிள்ளைகள் போல ஒற்றுமையாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில் நாட்டில் இடம் பெற்றுள்ள குண்டுவெடிப்புச்சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ள அதுவும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற மனிதாபிமானமற்ற குண்டுவெடிப்புச் செயலினால் சிறுவர்கள் உட்பட 28 பேர் பலியாகியும், 75 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும் இப்பிரதேசத்தில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையம், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பௌத்த மதத்ததுறவி என்ற வகையில் இச் சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு மதவழிபாட்டுத்தலத்தை மையதக வைத்து இக் கொடூரச்செயலைப்புரிந்த யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்.
கிழக்கு மாகாணம் யுத்தத்திற்கு பிறகு அதன் அழிவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான துயரச்சம்பவம் சமாதானத்தை விரும்பும் எம்மை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந் நாட்டில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை சீரழிக்கும் சமூகவிரோதச் செயலில் ஈடுபடுபவர்களை தோற்கடிக்கவேண்டும்.
மீண்டும் இந்நாட்டில் இனவாத்தையும், மதவாத்தையும் விதைத்து மக்களை துன்பப்பாதைக்கு இட்டுச்செல்லும் கும்பல்களக்கு இடமளிக்கமுடியாது. நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும், பாதுகாப்பு அமைச்சும் உடன் செயற்பட்டு இவ் கொடூரச் செயலைப்புரிந்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பழிக்குப் பலி, பல்லுக்குப்பல், கண்ணுக்கு கண் வாங்குகின்ற எந்தவொரு செயற்பாட்டையும் எந்த மதங்களும் சொல்லவில்லை. அனைத்து மதங்களும் அன்பு பொறுமை, காரூண்ணியம் ஆகியவற்றையே போதிக்கின்றது. இந்தவகையில் காட்டுமிராண்டித்தனமான செய்கையில் ஈடுபட்டு அப்பாவி மக்களை வணக்கஸ்தலங்களில் வைத்து படுகொலை செய்தவர்களை பாராபட்சமின்றி தண்டிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுள்ளார்.
