கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் நாளை 06 ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிராந்திய சுகாதாரப் பணிமனையின் சுகாதரப்பணிப்பாளர்; டொக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.
கல்முனை பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி ஏற்றும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன. இதற்கமைய 60 வயதுக்கு மேற்பட்ட நடக்கமுடியாது வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கான நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சுகாதாரப்பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் ஒத்தழைப்புடன் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.
தற்போது கல்முனை பிராந்தியத்திற்கு 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இத் தடுப்பூசிகள் அனைத்தும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நாளை 06 ஆம் திகதி திங்கட்கிழமை தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
இங்கு ஏற்கனவே முதலாவது தடுப்பூசி மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளைப்பெற்றுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-செ.துஜியந்தன்-
