சமுர்த்தி சௌபாக்கிய தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வு கல்முனை வடக்கு தெற்கு சமுர்த்தி அபிவிருத்தி வங்கிபிரிவில் நடைபெற்றது.
கல்முனை வடக்கு சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்துகொண்டார். அத்துடன் தலைமைக்காரியாலய முகாமையாளர் வி.சிறிநாதன், சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான ஹிதாயா, தவசீலன் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர்.
நாடுபூராகவும் 10 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை வடக்கில் 2892 குடும்பங்கள் பெரும் போக வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கையாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இங்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான கண்ணொருவ விதைகள் பதனிடும் நிறு வனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட சிறந்த பயிர் விதைகள். மற்றும் பயனுள்ள உயர்ரக தென்னங்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்திற்கு மனைப்பொருளாதாரத்தினை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டச் செய்யும் தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை திட்டத்திற்கென 22 இலட்சத்து 33 ஆயிரத்து 495 ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

