மட்டக்களப்புத் தேசத்தின் கலை இலக்கியப் பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பாளியாக வலம் வந்தவரே எழுத்தாளர் அருள் செல்வநாயகம். அவரது இவ்வுலக வாழ்வு 1926 முதல் 1973 வரையான 47 ஆண்டுகளை உள்ளடக்கிய குறுகிய காலமாக அமையினும் அவரது இலக்கியப் படைப்புகள் ஒப்பீட்டளவில் எவருமே சாதிக்க முடியாதவை என்பதை யாருமே மறுக்க முடியாது. அது குறித்து இன்றைய தலைமுறை அறியவேண்டியது காலத்தின் கட்டாயமாகவேயுள்ளது.
சுவாமி விபுலானந்தரின் புகழை நூல்கள் மூலம் முதன்முதலில் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அருள் செல்வநாயகம். சிறுகதை கட்டுரை ஆய்வு ஆக்கங்கள்இ நாடகம் வாயிலாக இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழ் எழுத்துலகில் அழியாப்புகழ் பெற்றிருந்தார்.
மட்டு. மா நகரின் தென்பால் 28 கி. மீ தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் குருமண்வெளி எனும் அழகிய கிராமம் உள்ளது. மட்டக்களப்பு வாவி மேற்குப் புறமாக அழகூட்டி அரண் செய்ய பசுமை நிறைந்த நெல் வயல்களையும் நீர் நிலைகளையும் பாய்ச்சல்க் குளங்களையும் கொண்டதாக குருமண்வெளி விளங்குகின்றது. இவ்வழகிய கிராமத்தில் அன்றைய கிராமத் தலைவர் தம்பாய்பிள்ளை வள்ளியம்மை தம்பதியருக்கு 06.06.1926 ஆம் திகதி அருள் செல்வநாயகம் பிறந்தார்.
1946 ஆம் ஆண்டில் 'மின்னொளி' என்னும் பத்திரிகையில் 'விதியின் கொடுமை' எனும் முதல் சிறுகதை வெளிவந்தது. இதனால் பலரும் செல்வநாயகத்தைப் பாராட்டினர். இதனால் தந்தையார் மகனை மேலும் எழுதுவதற்கு ஊக்கமளித்தார். செல்வநாயகம் எஸ்.எஸ்.சீ பரீட்சையில் சித்தியடைந்து ஆசிரிய கலாசாலைப் புகுமுகப் பரீட்சைக்கும் தோற்றி அதில் தேறினார். 1948-1950 காலத்தில் நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார். 1950 ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியரானார். சிறந்த ஆசிரியராகவும்இ அதிபராகவும் மட்டக்களப்பிலும் மலையகத்திலும் பல பாடசாலைகளில் நல்லாசிரியராகஇ அதிபராகப் பணிபுரிந்தார். நுவரெலியா அக்கரைப்பத்தனையில் அதிபராய் இருந்தபோது 'பசுமலைப் பார்பதி' என்னும் கதையை எழுதி வெளியிட்டார். தமிழ் ஆசிரியனாக ஒருபுறத்தில் அவர் தனது தூய்மையான கல்விப்பணியை தடையின்றி முன்னெடுக்கவும் செய்தார்.
கல்கி கலைமகள் ஆனந்த விகடன் காவேரி கலைக்கதிர் உமா பேசும் குரல் திங்கள் கலைக்களஞ்சியம் சுதேசமித்திரன் அணுக்கதிர் தீபம் வ.உ.சிதம்பரனார் நினைவு மலர் மோகினி அமுத சுரபி கண்ணன் தினமணிக் கதிர் நண்பன் கங்கை ஆகிய இந்தியப் பத்திரிகையிலும் தினகரன் மின்னொளி சுயயோதி பாரதி உதயதாரகை திருநாடு. ஸ்ரீலங்கா ஈழகேசரி சேவைமணி ஆசிய தீபம் தமிழ்மணி சமூகத் தொண்டன் ஆத்மஜோதி வித்தியா போதினி புகையிரத சஞ்சிகை கலைச் சுடர் கலைச்செல்வி அன்னை கதம்பம் விவேகி தமிழின்பம் அமுதம் செய்தி ஆகிய பத்திரிகைகளிலும் தன் ஆக்கங்களைப் பிரசுரிக்கச் செய்து சாதனையாளராகத் திகழ்ந்தார்.
தமிழக எழுத்தாளர் கி. வாஇ ஜெகநாதன் இந்தியப் பத்திரிகைகளில் அருள் செல்வநாயகத்தின் சிறுகதைகள் தொடர்கதைகள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தமையைக் கண்டு இலங்கை தந்த எழில் மிகு எழுத்தாளர் அருள் செல்வநாயகம் தமிழ் நாட்டிற்கும்இ இலங்கைக்கும் தனது எழுத்தாக்கங்களால் கலைப்பாலம் அமைத்த எழுத்தாளர் என்று பாராட்டி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
23.04.1956 ஆம் ஆண்டில் இல்லற வாழ்க்கையில் இணைந்து அருளம்மாவை அன்பு மனைவியாகக் கரம்பிடித்துக் கொண்டபின் துணைவியாரின் பெயரை முதன்மைப்படுத்தி அருள் செல்வநாயகம் என்று தனது எழுத்துப் பணியைச் சிறப்பாகத் தொடர்ந்தார். திருவருட் செல்வம் ரி.டி. எஸ். வழிகாட்டி குருசெல்வம் செல்வா ரி.டி. செல்வநாயகம் குபேரன் எனும் புனை பெயர்களில் அருள் செல்வநாயகம் சிறுகதைகள் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வெளியிட்டார்.
காரே றுந்திரு மூதூர்த் தாய்தரு
கடவுட் காதல்மகன்
கருவிற் திருவுள கலைஞன் பெற்றோர்
கண்ணிறை திருமயிலோன்
ஏரே றும்படி கீழ்பால் மேல்பா
லாக்கிநல் லிசைநட்டோன்
இமயத் தலையிற் தமிழ்முத் திரைவரை
ஈழக் கரிகாலன்
என புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையினால் போற்றப்பட்ட முத்தமிழ் மாமுனிவர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றினை 'விபுலானந்த அடிகள்' எனும் பெயரில் எழுதி வெளியிட்ட அருள் செல்வநாயகம்இ அவரின்பால் உள்ள உளம்நிறைந்த பேர் ஈர்ப்பால் அதுவரை யாருமே செய்யாத பெரும்பணியொன்றினை துணிவுடன் மேற்கொள்ளலானார்.
சுவாமியவர்களால் காலத்துக்குகாலம் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இலக்கியக் கட்டுரைகள் கவிதைகள் நாடகங்கள் பல்வேறு இடங்களிலும் அவரால் நிகழ்த்தப்பட்ட பொருள்பொதிந்த உரைகள் என - எந்தவித முன்மொழிவுகளும் அற்ற நிலையில் ஈழம் தமிழகம் எனத் தேடித் தேடி சேகரித்து அவற்றை முறைப்படுத்தித் தொகுத்து விபுலானந்தத்தேன் விபுலானந்த வெள்ளம் விபுலானந்த செல்வம் விபுலானந்த ஆய்வு விபுலானந்தர் கவிதைகள் விபுலானந்தக் கவிமலர் விபுலானந்த அமுதம் விபுலானந்தச் சொல்வளம் விபுலானந்த அடிகள் என்னும் பத்து நூல்களையும் அருள் செல்வநாயகம் வெளியிட்ட சாதனைகண்டு தமிழ் கூறும் நல்லுலகம் அவரைப் பாராட்டுகின்றது.
இதில் முக்கியப்படுத்தப்பட வேண்டிய அம்சம் யாதெனில் சுவாமியின் பெருமளவு ஆக்ககங்கள் அச்சிடப்படாமல் கையெழுத்துருவில் இருந்தமையும் அவற்றில் சில சிதைந்த நிலையில் காணப்பட்டமையுமாகும். இந்நூல்களை வெளிக்கொணர அவர் மேற்கொண்ட முயற்சி அவரது வாழ்வின் பெரும் சாதனையாகவே பார்க்கப்படும். இதன்மூலம் அருள் செல்வநாயகம் அதுவரை யாருமே செய்யாத - சுவாமியவர்களின் தமிழ்ப்பணியை வெளிக்கொணர்ந்ததன் மூலம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நிலையான பெரும்பணியொன்றினை செய்த பெருமகனாக வரலாற்றில் நிலைபெறலானார்.
இவற்றில் விபுலானந்த வெள்ளம் தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இளம்கலை பட்டப்படிப்பின் பாட நூலகவும் விபுலாந்த இன்பம் மற்றும் விபுலானந்த ஆய்வு ஆகியவை முறையே இலங்கையில் க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தரம் என்பவற்றுக்கு அன்றும் பாடநூலாகவும் அங்கீகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்துறை விற்பனர் முத்தமிழ் வித்தகர் என விபுலானந்தரைப் பற்றி அருள் செல்வநாயகம் நன்கு அறிந்திருந்தார். பல்துறை சார்ந்த பணிகள் புரிந்த சுவாமி விபுலானந்தரின் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்த ஆக்கங்களையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தொகுப்புக்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்துப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் யாரும் எதிர்பாராத வகையில் யாருடைய உதவியும் பெறாது தன்னந்தனியனாக தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழகம்- மதுரைக்குச் சென்று கரந்தை தமிழ்ச் சங்க பிரமுகர்கள்இ தமிழ் அறிஞர்களைத் தேடிக் கண்டு அவர்களின் உதவியுடன் அதிக பணம் செலவு செய்து விபுலானந்த வித்தகருடைய கையெழுத்துப் பிரதிகளைப் பெற்று வந்தார்.
'விபுலம்' எனபதற்கு விரிந்தது பரந்தது அகன்றது என்று பொருள்படும். 'விபுலம்' என்பது அறிவு எனவும் பொருள்படுவதால் முத்தமிழ் வித்தகர் அறிவினால் உலகை ஆள்பவர் என்பதே சாலப் பொருத்தமானது. இத்தகைய பரந்த அறிவின் ஊற்றான விபுலானந்தரால் எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் கவிதைகள் இலக்கியக் கட்டுரைகள் முதலியவைகளை அருள் செல்வநாயகம் தேடிப் பெற்று 'விபுலானந்த அடிகள் எனும் நூலை 1953 ஆம் ஆண்டு வெளியிட்டார். அருள் செல்வநாயகத்திற்கு முன்னோடியாக விளங்கியவர் தென் புலோலியூர் கணிபதப் பிள்ளையவர்கள். அவர் விபுலானந்த சுவாமிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதைத் துணைக்கொண்டு பல அறிஞர்களும் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தரைப் பற்றி எழுதத் தொடங்கினார்.
'விபுலானந்த அடிகள்' எனும் அருள் செல்வநாயகம் எழுதிய நூலில் விபுலானந்தரின் வாழ்க்கை வரலாறுஇ அவர் ஆற்றிய பணிகள் என்பவற்றை முதன் முதலில் தமிழ் மக்கள் அறிவதற்கு முன்னோடியாக விளங்கியவர் அருள் செல்வநாயகம்.
முதன் முதலில் விபுலானந்தரைப் பற்றித் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமகன் அருள் செல்வநாயகம் என்பதைத் தமிழ் மக்கள் நன்கறிவர். விபுலானந்த அடிகள் பற்றி அருள் செல்வநாயகம் முதலில் எழுதிய பின்னரே மேலும் பல அறிஞர்கள் தமிழ்ப் பேராசிரியர்கள் எழுதினர் என்று எண்ணும்போது அருள் செல்வநாயகம் விபுலானந்த வித்தகர் மீது கொண்டிருந்த பக்தியும் பணிவும் புலப்படுகின்றன. அருள் செல்வநாயகம் முத்தமிழ் வித்தகரின் எண்பத்தொன்பது கட்டுரைகளைத் தேடிப் பெற்று அழியாது பாதுகாத்து நூல்களாக வெளியிட்டமையால் விபுலானந்தருடைய பெயருடன் இணைத்து தமிழ் கூறும் நல்லுலகால் பாராட்டப்படவேண்டியவராகின்றார் அருள் செல்வநாயகம் என்று யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் . பாலசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலும் தமிழகத்திலும் முதன் முதலில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து பல்துறைகள் சார் பணிகள் புரிந்தவர் சுவாமி விபுலானந்தர். விபுலானந்தரைப் பற்றிப் பல்கலைக்கழக பேராசிரியர்களோஇ கல்வியாளர்களோ அக்கறை கொள்ளாதிருந்தபோது சாதாரண தமிழ் ஆசிரியராக இருந்த அருள் செல்வநாயகம் விபுலானந்தரின் ஆக்கங்களை தொகுத்து அவற்றை அழியாது பாதுகாத்து நூல்களாக தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்கியமை சாலச் சிறந்ததாகும்.
சுவாமி விபுலானந்தர் தான் எழுதிய ஆக்கங்கள் சொற்பொழிவுகள் நாடகங்கள் கவிதைகள் ஆராய்ச்சிக்கட்டுரைகள் என்பவற்றிற்கு எவ்விதமான குறிப்புகளையோ பதிவுகளையோ ஆவணப்படுத்தி வைக்கவில்லை. அருள் செல்வநாயகம் இந்த நிலைமையிற்றான் விபுலானந்தரின் ஆக்கங்களைத் தேடிச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தமிழ்இ செந்தமிழ்ச் செல்வி தமிழ்ப் பொழில் பிரபோதபாரத இராமகிருஷ்ண விஜயம் மாதவையாவின் பஞ்சாமிர்தம் இ மு.க. கதிரேசன் செட்டியார் மணிமலர் ஞாயிறு கலாநிதி ஈழ மணி ஈழகேசரி இந்துசாசனம் விவேகானந்தன் முதலிய ஆய்விதழ்கள் வாரப்பத்திரிகைகள் சிறப்பு மலர்களில் வெளிவந்த சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்களையெல்லாம் அருள் செல்வநாயகம் தமிழகம் சென்று தொகுத்தார். இவை அருள் செல்வநாயகத்தின் எழுத்தாக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன.
அருள் செல்வநாயகம் தொகுத்த நூல்களில் விபுலானந்த ஆய்வு எனும் நூல் ஜீ.சி.ஈ. வகுப்பிற்கு இலக்கிய பாடப் புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. விபுலானந்த வெள்ளம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வகுப்புப் பாட நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. விபுலானந்த இன்பம் க. பொ. த. உயர்தர வகுப்புக்கு பாட நூலாக இருந்தது. இவை அருள் செல்வநாயகத்தின் எழுத்தாற்றலுக்குக் கிடைத்த வெற்றிக் கனிகள் எனலாம்.
விபுலானந்தரின் ஆக்கங்களைக் கல்விப் புலத்திற்குத் தொகுத்து வழங்கியவர் அருள் செல்வநாயகம். அவருக்குக் கிழக்குப் பல்கலைக்கழகம் உயரிய மதிப்பும் கெளரவமும் அளிக்கும் எனக் கற்றறிந்த தமிழ் உலகம் எதிர்பார்க்கிறது என்று பேராசிரியர் இ. பாலசுந்தரம் அருள் செல்வநாயகத்தின் விபுலானந்த இலக்கியத்திற்கு எழுதிய கட்டுரையில் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பிரபல இலக்கிய அமைப்பான 'வாசகர் வட்டம் வெளியீடும்' அக்கரை இலக்கியம் என்ற சஞ்சிகையில் அருள் செல்வநாயகத்தின் சிறுகதை இடம்பெற்றமையும் பாராட்டிற்குரியது. தமிழ் நாட்டு இதழ்களுக்குத் தொடர்கதைகள் எழுதியவர் அருள் செல்வநாயகம். இவர் தமிழ் நாடகங்கள் எழுதுவதிலும் சிறந்து விளங்கினார். இலங்கையிலிருந்து முதல் முதலில் இந்திய வானொலியில் வெளிநாட்டு ஒலிபரப்புக்காக நாடகங்களை எழுதிய பெருமையும் இவரையே சாரும். அகில இந்திய வானொலியில் 14 நாடகங்களும் மலேசிய வானொலியில் 15 நாடகங்களும் இலங்கை வானொலியில் 38 நாடகங்களும் ஒலிபரப்பப்பட்டதாக அறிகிறோம் என விபுலானந்த இலக்கியத்திற்கு பேராசிரியர் சி. மெளனகுருவின் முன்னுரையாகச் சில குறிப்புகள் எனும் கட்டுரையிலே விபுலானந்தவியலுக்கு அத்திவாரமிட்ட மூலவர் அருள் செல்வநாயகம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுரைகள் எழுதுவதிலும் அருள் செல்வநாயகம் தன்னிகரற்றுத் திகழ்ந்தார். இதற்கு இவர் எழுதிய 'நறுமலர்மாலை' என்னும் நூல் சான்றாகவுள்ளது.
சுவாமி விபுலானந்தரின் ஆக்கங்களை தொகுப்பாகக் கொண்டு எழுதிய பத்து நூல்களுடன் பாஞ்சாலி சுயம்வரம் பாசக்குரல் தாம்பூலராணி சதாரம் பூசணியாள் மர்ம மாளிகை உயிர் ஈந்த ஓவியம் ஈழமும் தமிழரும் என்னும் நூல்கள் அனைத்தும் அருள் செல்வநாயகத்தின் சிந்தனையில் விளைந்த எழுத்தோவியங்களே எனலாம்.
தனது வாழ்நாளெல்லாம் ஓய்வென்றும் சாயாமல் நோயென்றும் வீழாமல் ஓயாத எழுத்துப் பணியிலும் தாழாத கல்விப் பணியிலும் மூழ்கிப்போன அப் பெருமகனை காலன் உள்ளிருந்து நோகாதறுத்தமை யாராலும் அறியப்படாததே. திடீரென நோய்வாய்ப்பட்ட அவர் 1973 செப்ரம்பர் 2 ஆம் நாள் யாழ்ப்பாணம் மருத்துவ மனையில் தனது 47 வது அகவையில் மரணத்தைத் தழுவினார்.-பாக்கியராஜா மோகனதாஸ்-
