சிறுவர்களுக்கு எதிரான வன்முறை துஷ்பிரயோகங்கள் எங்கள் நாட்டிலிருந்து இல்லாமல் செய்யப்பட வேண்டியன. அப்போதுதான் நாளைய சமூகத்தை படைக்கப்போகும் சிற்பிகளான இன்றைய சிறார்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். சுபீட்சத்தை நோக்கி நகர்கின்ற இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடு ஒன்றின் சிறுவர்களின் கல்வி வளர்ச்சி உடல் உள ஆரோக்கியம் ஆளுமைத் திறன் விருத்தி என்பன நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட வன்முறைகள் இவை அனைத்தையும்
பாரியளவில் பாதிக்கின்றன என மட்டு. போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட உளநல மருத்துவ நிபுணர் தன. கடம்பநாதன் என்னவாம் இணையத்தளத்திற்கு அளித்த நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு.
கேள்வி : சிறுவர்களுக்கெதிரான வன்முறை துஷ்பிரயோகங்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில் : சிறுவர்களுக்கு எதிரான வன்முறை துஷ்பிரயோகங்கள் எங்கள் நாட்டிலிருந்து இல்லாமல் செய்யப்பட வேண்டியன. அப்போதுதான் நாளைய சமூகத்தை படைக்கப்போகும் சிற்பிகளான இன்றைய சிறார்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். சுபீட்சத்தை நோக்கி நகர்கின்ற இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடு ஒன்றின் சிறுவர்களின் கல்வி வளர்ச்சி உடல்இ உள ஆரோக்கியம்இ ஆளுமைத் திறன் விருத்தி என்பன நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட வன்முறைகள் இவை அனைத்தையும் பாரியளவில் பாதிக்கின்றன.
சிறார்கள் வாழும் குடும்பமும் கல்வி கற்கும் பாடசாலை சமூகமுமே சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் பிரதான பாதுகாப்பு அரண்களாக செயற்படுகின்றன. இந்த வன்முறைகள் குடும்பங்களில் மற்றும் பாடசாலைகளில் நிலவும் சூழ்நிலைகளின் ஆரோக்கியமற்ற தன்மையின் அளவீடாகவும் கொள்ள முடியும்.
கேள்வி : சிறார்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறைகள் குறித்து பொதுமக்கள் விழிப்பு நிலையிலுள்ளனரா ?
பதில் : கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது சிறார்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. ஆயினும் உளவியல் ரீதியான வன்முறைகள் ஒரு பாரிய தாக்கத்தைச் செலுத்த வல்லதாகப் பார்க்கும் தன்மை உடல் ரீதியான பாலியல் ரீதியான பொருளாதார ரீதியான வன்முறைகளைப் பார்க்கும் தன்மையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் மிகவும் ஆழமாக நோக்கினால் சிறுவர்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து விலக அந்தக் குடும்பங்களில் நிகழும் பாதக சம்பவங்களும் அந்த சிறுவர்கள் உள்ளாகும் உணர்வு ரீதியிலான வன்முறைகளுமே பின்னணியாகும்.
கேள்வி : குடும்பங்களுக்குள் பெண்களைச் சமத்துவமாக நடத்தும் போக்கு காணப்படுகிறதா ?
பதில் : எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் ஆண் பெண் சமத்துவம் எங்கள் குடும்பங்களில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. இதற்கு ஆண் பெண் சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் பெண்களின் கல்வியறிவில் ஏற்பட்ட அதிகரிப்பு பெண்களில் ஏற்பட்ட பொருளாதார ரீதியிலான தன்னிறைவு போன்ற பல காரணங்கள் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன. ஆயினும் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்கிட இன்னும் நிறைவான தொடர்ச்சியான செயல்திட்டங்கள் அவசியமாகின்றன. பால்நிலை சமத்துவம் தொடர்பான எண்ணக் கருக்களை சிறுவர் பராயத்திலிருந்தே அறிமுகப்படுத்தும்போதே எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை அடைய முடியும்.
கேள்வி : சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை பாலியல் துஷ்பிரயோகம் அதிகம் இடம்பெறுவதற்கான பின்னணி ?
பதில் : எங்களால் அவதானிக்கப்படும் அதிகரிப்பு பல காரணங்களால் ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக இன்று பொதுமக்கள் மத்தியில்
அதிகரித்துச் செல்லும் விழிப்புணர்வினால் பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட சிறார்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒப்பீட்டளவில் அதிகமாக அறிக்கையிடப்படுகின்றன. முக்கியமாக சிறுவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நேரடியாக முறைப்பாடு செய்வதற்கு 1929 என்ற அவசர இலக்கமும் பெண்கள் முறைப்பாடு செய்ய 1938 என்ற விசேட அவசர தொலைபேசி இலக்கமும் உதவி செய்கின்றன. இதற்கு மேலாக பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்கான ஏதுநிலைகள் இன்றைய சூழலில் பெருகுவதையும் குறிப்பிட வேண்டும்.
சிறுவர்கள் மத்தியில் பாலியல் தொடர்பாக சிறார்களின் வயதுக்கேற்ற அறிவூட்டல் இல்லாத நிலையிலும் தமது கல்வி நடவடிக்கைக்காக இணையம் கைத்தொலைபேசிப் பாவனை என்பவற்றை பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பற்ற தவறான தொடர்பாடல்களுக்கான சந்தர்ப்பங்கள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
முப்பதாண்டுக்கும் மேற்பட்ட முரண்பாடுகள் யுத்த சூழ்நிலை என்பவற்றுக்குள்ளாகிய நிலையில் எங்களது குடும்பங்கள் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்த சவால்களில் இருந்து சில குடும்பங்கள் மீண்டெழுந்துள்ள போதிலும் இன்னும் சில குடும்பங்கள் நலிவுற்ற குடும்பங்களாக மாறுகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகிறது. இப்படியான குடும்பங்களில் பொருளாதாரம் மிக மிக கீழ் மட்டத்தில் இருப்பதுடன் மதுப்பாவனை உறவுகளில் முரண்பாடுகள் மற்றும் பிரிவுகள் தொழில் நிமித்தம் புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அந்தக் குடும்பங்களில் வாழுகின்ற சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறுகின்றது. சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லுதல் என்பது சிறுவர்களின் கல்வியை மாத்திரமல்ல சிறார்களின் சுய பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் விடயமாகும்.
துரதிஷ்டவசமாக நலிவுற்ற குடும்பங்களில் சிறுவர்கள் பல காரணங்களின் நிமித்தம் சிறார்கள் பாடசாலையை விட்டு விலகுவது சிறார்களின் கல்வியை மட்டுமல்லாது சிறார்களின் பாதுகாப்பினையும் பாதிக்கிறது.
கேள்வி : சிறுவர் பெண்கள் சமூக நன்னடத்தை அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு பொதுமக்களின் எவ்வாறான உதவி ஒத்துழைப்புகள் வேண்டப்படுகின்றன ?
பதில் : சிறுவர்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் பல்வேறுபட்ட அரச உத்தியோகத்தர்கள் பணிபுரிவது உண்மைதான். இவர்கள் தங்களது பணியை செவ்வனே புரிவதற்கு சமூக மட்டத்திலான விழிப்புணர்வு மற்றும் சமூகத்தில் இருந்து தெரியப்படுத்தும் தகவல்கள் மிகவும் அவசியமானவை. தங்களது பிரதேசங்களில் சிறுவர்கள்
மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்கின்றபொழுது அந்த விடயங்களை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதன் மூலமே அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் அந்த நடவடிக்கைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் உட்பட தேவைப்படும் இடையீடுகளை மேற்கொள்ள முடியும்.
கேள்வி : சிறார்கள் மீதான வன்முறை துஷ்பிரயோகங்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்க சட்டம் இயற்றும் நிலையிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பாரற்று இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில் : கடந்த இருபதாண்டுகளில் சிறுவர்களுக்கெதிரான வன்முறை துஷ்பிரயோகத்தை குறைக்கும் முகமாகவும் சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கிலும் பல்வேறுபட்ட சட்ட ஆக்கங்கள் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தினூடாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சரவையினூடாக இவை சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. இது போன்ற சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும்இ வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களையும் சட்டத்திருத்தங்களையும் அரசமைப்பினுள் உள்வாங்கும் தன்மையுடன் ஒப்பிடும்போது அவற்றை அமுல்ப்படுத்துவதிலுள்ள பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
இவை தொடர்பான தகவல்களை திரட்டுதல் நீதிமன்றத்தில் அவற்றை சமர்ப்பித்தல் வழக்குகளுக்கான அதிகாரிகளை நியமித்தல் வழக்கினை நடத்துதல் என்ற பல மட்டங்களில் ஊடாக செல்லுவதற்கு பத்து வருடங்களுக்கு மேல் எடுக்கின்றன. இந்தக் காலத்தை குறைப்பதற்கான பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் எடுக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
அதைப்போல இவை தொடர்பான மக்கள் பிரதிநிதிகளின் கவனம் அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தங்களது பிரதேசங்களில் இவை நிகழ்கின்ற பொழுது அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்தச் சிறுவர்களின் நலனை தேவையான சட்டங்கள் அமுலாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு இவர்களால் மேலும் காத்திரமான பங்கினை ஆற்ற முடியும்.
கேள்வி : பெண்கள் முகங்கொடுக்கும் உடல் உள பிரச்சினைகளை தெரியப்படுத்தப்படாவிட்டால் பிரச்சினைகள் குறைவதற்கான வாய்ப்பில்லையே ?
பதில் : பாதிக்கப்பட்ட நபர் வெளிப்படுத்தாது இருப்பதனை முக்கிய காரணமாக குறிப்பிட முடியும். இதற்கு பல காரணங்கள் அடிப்படையாக அமைகின்றன. வெளிப்படுத்துவதில் உள்ள தயக்கம்இ வெளிப்படுத்தும் பொழுது குடும்பம் மற்றும் சமூகம் அதைப் பார்க்கும் விதம் சட்ட நடவடிக்கை தொடர்பான அச்சம் பாதிப்பை ஏற்படுத்திய நபர் குடும்பத்துக்கு நெருங்கியவராக இருப்பது அல்லது சமூக மட்டத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பது போன்ற பல காரணங்களை குறிப்பிட முடியும்.
இதனாலேயே உடல் உள சவால்களை ஏற்றுக்கொண்டோ பொறுத்துக்கொண்டோ இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பெண்கள் உள்ளாகின்றனர். மேலும் இதற்கான உதவியை நாடுவது தங்களது இருப்பை குடும்பத்தின்
சமூகத்தில் சவால் மிக்க தாக்கம் என்று தவறாக எண்ணுவதும் இதற்கு காரணமாக அமைகிறது. இவை தொடர்பான தொடர் அறிவூட்டல் மிகவும் அவசியம்.
கேள்வி : ஆரோக்கியமான சமூகத்தில் ஒவ்வாத செயற்பாடுகள் இடம்பெறும்போது சமூக மட்டச் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் ?
பதில் : ஆரோக்கியமான சமூகத்திற்குள் ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சமூகத்திலிருந்து ஒதுக்க வேண்டிய நடவடிக்கைகளை சமூகம் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சம்பவங்களினால் பாதிக்கப்படும் நபர்களை விட ஏதோ ஒரு வகையில் சமூகத்தில் அதிகாரம் மிக்க நிலையில் இருப்பதனால் இது ஓர் இலகுவான விடயமாக அமையாது. இந்த சமூக மட்ட வேறுபாடு சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்கவல்ல செயற்பாடுகளை அவர்கள் வாழும் சமூகம் தெரிந்தோ தெரியாமலோ செய்வதற்கு தூண்டுகோலாகவும் அமைந்து விடுவதைக் காண முடிகிறது.
கேள்வி : சிறுமிகள்இ பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் கொடூரம் எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுக்க எவ்வாறானவற்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் ?
பதில் : புதிய அம்சங்களுடன் கூடிய சட்டவாக்கங்கள்இ சட்டத்திருத்தங்கள் மேலும் அவசியமாகின்றன. குறிப்பாகச் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல் சிறுவர்களுக்கான கல்வியை உறுதிப்படுத்துதல் இடை விலகும் சிறுவர்களை இலகுவில் அடையாளங்கண்டு மீண்டும் பாடசாலையுடன் ஒன்றிணைக்கும் பொறிமுறை சிறுவர் நட்புறவுடன் கூடிய சட்ட ஏற்பாடுகள் கற்றல் இடர்பாடுகள் உள்ளிட்ட பலவகை அடிப்படைக் காரணங்களை நிவர்த்திக்கும் நடவடிக்கைகள் பெற்றோருக்கான அறிவூட்டல் போன்ற பல்துறை சார் அம்சங்கள் அமுலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்குள்ளது. அதே போலப் பாதிக்கப்படும் சிறுவர்களுக்குத் தேவையான அவசரகால உதவிகள் உள்ளிட்ட நலனோம்பல் திட்டங்களை இலகுவில் கிடைக்க வழி வகை செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
கேள்வி : சிறார்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு உணர்வு ரீதியான கையாள்கை பொருத்தமானதா ?
பதில் : கடந்த காலங்களில் சிறார்களது சம்பவங்களுக்கெதிராக
மக்கள் பிரதிநிதிகள் பொதுசன அமைப்புகள் உள்ளிட்ட குரல்கள் ஓங்கி ஒலித்தமையைக் கண்டோம். அந்த சம்பவங்களின் கொடூரம் அவை நிகழ்ந்த விதம் என்பவற்றால் எழுப்பப்படுகின்ற உணர்வுகளின் வெளிப்பாடுகளாகவே அவை அமைந்து விடுகின்றன. காலப் போக்கில் இன்னுமோர் விடயம் வந்தவுடன் இவை மறக்கப்பட்டு விடுவதனையும் அவதானிக்கலாம். இந்த வன்முறைகளைக் குறைப்பதற்கு சமூகம் சார்ந்து விழிப்புணர்வு மட்டுமல்ல இதற்கு எதிரான பலம்மிக்க சமூக பாதுகாப்பு பொறிமுறைகள் அவசியமாகின்றன. சமூகத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும்பொழுது அவற்றை குறித்த அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவது மாத்திரமல்லாது அந்த பாதிப்புக்குள்ளான நபர்களின் குடும்பத்தாருக்கு உரிய ஆதரவையும் சமூகப் பாதுகாப்பையும் வழங்குவதுடன் நபர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்படியான சமூகம் சார்ந்த கூட்டு ஆதரவே சமூகத்தில் குறைந்த மட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுவாக அதிகாரம் பணம் பதவிநிலை அந்தஸ்து போன்ற பல விடயங்களைப் பாவித்து உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் என்பவற்றினை ஏற்படுத்திய நபர்களால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களைக் குறைப்பதற்கு முடியும்.
சம்பவ மாநாடுகளில் அந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியே சுதந்திரமாக சுற்றித் திரியும் பொழுது பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் பாதுகாப்பின் நிமித்தம் தற்காலிகமாக சில காலம் பாதுகாப்பு விடுதிகளில் இல்லங்களில் வைக்க வேண்டிய நிலமையும் ஏற்படுகிறது.
இந்தச் செயல்பாடு பாதிக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற பொழுதிலும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை இல்லாது செய்வதாக அமைகின்றது.
நேர்கண்டவர் : -பாக்கியராஜா மோகனதாஸ்-
