மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தொற்றாளர்களின் வீதம் அதிகரித்துச் செல்கின்றன. அதிலும் களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்கின்றனர். இப் பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திலுள்ள துறைநீலாவணை, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாட்சிமடம், மகிழுர், குறுமண்வெளி, எருவில், பட்டிருப்பு, களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையும், குருக்கள்மடம் ஆகிய கிராமங்ளில் பலர் வீடுகளில் சுகாதாரவிதிமுறைகளைப் பின்பற்றாது பிறந்தநாள், திருமண நிகழ்வுகள், சாமத்திய சடங்குகள் ஆகியவற்றை அதிகமான உறவினர்களை ஒன்று திரட்டி நடத்திவருவதாக சுகாதாரப்பிரிவினருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
இதற்கமைய பொலிஸாரின் உதவியுடன் பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கிடைக்கப்பெறும் தகவலுக்கமைய நிகழ்வுகள் நடைபெறும் வீடுகளுக்குச் சென்று சட்ட நடவடிக்கை எடுத்துவருகின்றனர். தேற்றாத்தீவு கிராமத்தில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெறுவதாக சுகாதாரப்பரிவனருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அங்கு சென்ற சுகாதாரப்பிரிவினர் நிகழ்வு நடைபெறவிருந்த வீடுகளை சோதனையிட்டனர். குறித்த பகுதிக்கு சுகாதாரப்பிரிவினர் வருகை தருவதை முன்கூட்டியே அறிந்து கொண்டவர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து அப்பகுதியிலுள்ளவர்களை அழைத்து கொரேனா தொற்றின் உயிராபத்தை எடுத்துக்கூறியதுடன் இக் காலப்பகுதியில் எதுவித நிகழ்வுகளையும் வீடுகளில் செய்யவேண்டாம் என வேண்டுகோள்விடுத்தனர். .
-படங்கள் செய்தியாளர்- .செ.துஜியந்தன்-


