கேள்வி : சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில் : பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் எதிர்நோக்கும் சகல வித வன்முறைகளும்
சிறுவர்களுக்கெதிரான வன்முறையாகும். உடல் உள ரீதியாக ஆண் சிறுவர்களோ பெண் சிறுமிகளோ சமமான ஆபத்தினையே சமூகத்தினால் எதிர்நோக்குகின்றனர். அதிலும் பெண் சிறார்களே உடல் ரீதியான (Sexual absue) முறைகளை பெரிதும் தொடர்ச்சியாக எதிர்நோக்குகின்றனர். இது காலம் காலமாக தொடராக அரங்கேறிக்கொண்டிருப்பது கவலைக்குரியதென்பதை விட நாம் வெட்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.
அரக்க குணம் படைத்த ஆண்கள் இருக்கும் வரை சட்டங்களால் அவ்வப்போது தண்டனைகளை வழங்க முடியுமே தவிர திட்டமிட்டு கயவர்களால் முன் னெடுக்கப்படும் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இதில் பெற்றோரின் அசமந்தப் போக்கும் பாராமரிப்புக் குறைவும் ஒரு காரணியாகும். சிறுவர்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோருடையதாகும்.
2013 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தினால் செய்யப்பட்ட கணக் கெடுப்பின்படி ஒரு வருடத்திற்கு 1500 க்கும் மேற்பட்ட சிறார்கள் தொடர்பான வழக்குகள் பதியப்படுகின்றன. அதிலும் துஷ்பிரயோக வழக்குகள் அதிகமானவை. கிராமங்களில் சிறுவர்களுக்கெதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தற்போதைய காலங்களில் மிகவும் அதிகரித்தேயுள்ளது. இதில் போதைவஸ்து பாவனையின் அதிகரிப்பு மதுபோதை பெற்றோரின் கவனமின்மை வறுமை போன்ற காரணிகள் அதிகம் செல்வாக்கு செலுத்துகின்றன.
மேலும் நீதிமன்றங்களில் சிறுவர்களுக்கெதிரான வன்முறை மற்றும் துஷ் பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் தவணைகள் மூலம் இழுத் தடிக்கப்படாமல் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிக்கான தண்டணை கடினமாக்கப்பட வேண்டும்.
கேள்வி : மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுக் கலாசார கட்டமைப்பை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில் : இந்தியத் தமிழர்கள் தோட்டத் தமிழர்கள்இ தோட்டத் தொழிலாளர்கள் மலையகத் தமிழர்கள் என அழைக்கப்படுகின்றனரே தவிர இலங்கைத் தமிழர்கள் என அழைக்கப்படுவதில்லை. இது அவர்களுக்கான அடை யாளத்தை பாதிக்கின்ற ஒரு காரணியாகவே பார்க்கிறேன்.
இங்கு தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்தாலும் எஸ்டேட் பாடசாலைகளில் தமிழ் மொழியின் பாவனை குறைவாகவேயுள்ளது. இப்பாடசாலைகளில் தமிழ்
ஆசிரியர்களின் வீதம் குறைவாகவேயுள்ளது என்பது கவலைக்குரியது. தொழிற் சங்கங்களினாலும் (trade union) முதலாளிகளினாலும் மலையகத் தொழிலாளர்களின் சமூக பொருளாதார அரசியல் குடும்ப வாழ்க்கை முறைமை கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே நிதர்சன உண்மை.
நாட்டிற்கு பாரிய பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுக்கும் இலங்கை மலையக மக்களின் வாழ்க்கை நிலைமை இற்றைவரை கேள்விக்குரியாகவே பார்க்கப்படுகிறது. சமூக பொருளாதார அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்கள் அடிப்படை உரிமைக்காக போராட வேண்டியதொரு சூழ்நிலையிலேயே இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர்.
கேள்வி : இலங்கை முழுவதிலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகம் இடம்பெறுவதாக கூறப்படுகிறதே அவ்வாறு இடம்பெறுவதற்கான பின்னணி ?
பதில்- பெற்றோர்களின் வேலைப்பழுவினால் பெற்றோருக்கும் சிறார் களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்த கல்வியறிவு வருமானம் மற்றும் வன்முறை தொடர்பான விழிப்புணர்வின்மை பெற்றோர் களுக்கிடையிலான பிரிவு வறுமை போதைவஸ்து மற்றும் மதுப் பாவனை அதிகரிப்பு குறைந் தளவிலான சமூக பாதுகாப்பு போன்றவைகளே சிறார்களுகிடையிலான வன் முறையினை தூண்டும் பின்னணியாகவுள்ளது.
கேள்வி : மிக மோசமான செயற்படுகளில் ஈடுபடுபவர்களுக்கெதிராக சமூகமட்டச் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் ?
பதில் : கடுமையான தண்டனைச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். உதாரணம் மரண தண்டனை. மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபடு பவர்களுக்கெதிராக சமூக நலன் கருதி சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் தோன்றாதிருத்தல்இ குற்றவாளியை தெரிந்தவர் அல்லது இனம் கண்டவர் சட்டத்தின் முன் நிலை நிறுத்த முன்வருவதன் மூலம் தகுந்த தண்டணையை பெற்றுக்கொடுத்தல். மேலும் மிக மோசமான செயற்படுகளில் ஈடுபட தூண்டுபவர்களையும் அதற்கு துணை போகின்றவர்களையும் சட்டத்தின் முன்னும் சமூகத்தின் முன்னும் இனம் காட்டுதல் வேண்டும்.
கேள்வி : டயகம சிறுமிக்கு நடந்த கொடூரம் எதிர்காலத்தில் இடம் பெறாமலிருக்க எவ்வாறானவற்றை செய்ய வேண்டும் ?
பதில் : கிராம நகர மட்டங்களில் சிறுவர்களை பராமரிப்பது தொடர்பான பயிற்சி விழிப்புணர்வுகளை பராமரிப்பாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குதல் வறுமை மட்டத்தில் உள்ளவர்களின் பொருளாதாரத்தை உயர்த் துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்குதல் சிறுவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துதல் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது தொடர்பாக கடுமையான சட்டங்களை உருவாக்குதல் சிறுவர்களின் பாடசாலைக் கல்வி தொடர்பாகவும் இடை நிறுத்த இடை விலகல் தொடர்பாகவும் பாடசாலை வலய மட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சிறுவர் உரிமை தொடர்பான சட்டங்கள் என்ற கற்கை நெறியை பாடசாலை மட்டத்தில் அறிமுகப்படுத்தும்போது
சிறார்கள் விழிப்புணர்வு பெறுவதுடன்இ சிறுவயதிலேயே சிறுவர் உரிமைச் சட்டங்களை அறிந்துகொள்ளவும் முடியும்.
மேலும் பாலியல் கற்கை நெறியும் பாடசாலை மட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட வேண்டும். அது மட்டுமன்றி பாலியல் வன்முறை தொடர்பான விழிப்புணர்வுகள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும்போதே சிறார்களைப் பாதுகாப்பதற்கான யுக்திகளை கையாளகூடியதாக இருக்கும்.
கேள்வி : சிறார்கள் மீது ஏற்படுத்தப்படும் வன்மங்களை குறைக்க எவ்வாறான அரசலுவலக அதிகாரிகள் முன்வர வேண்டும் ?
பதில் : மாவட்ட அரச அதிபர்கள் பிரதேச செயலாளர்கள் கிராம சேவை யாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட சமூக மட்ட அமைப்புகள் முன்வருதல் வேண்டும்.
கேள்வி : அரசலுவலகங்களில் சிறுவர்கள் பெண்கள் பிரிவு சமூக சேவை பிரிவு மற்றும் பெண்கள் துறைசார் அமைப்புகள் இருந்தும் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை துஷ்பிரயோகங்கள் குறைவதாக தெரியவில்லையே ?
பதில் : நடைமுறையில் உள்ள சட்டங்கள் மீதான பயம் போதாமை இலஞ்சம் அரச அதிகாரிகளின் அலட்சியப்போக்கு கவனமின்மை குற்ற வாளி களுக்கெதிரான தண்டனைகள் துரிதப்படுத்தப்படாமை போன்ற பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தும் வரை சிறார்கள் மற்றும் பெண்களுக் கெதிரான பாலியல் வன்முறை துஷ்பிரயோகங்களை குறைப்பது கடினமாகும்.
கேள்வி : சிறார்கள் மீதான வன்முறை துஷ்பிரயோகங்களுக்கெதிரான சட்ட ங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா ?
பதில் : 50 வீதமே முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. மீதி இலஞ் சத்தினாலும் அரச அதிகாரிகளின் அலட்சியப்போக்கினாலும் நடை முறைப்படுத்தப்படுவதில்லை. அதுமட்டுமன்றி வெளிச்சத்துக்கு வரும் வழக் குகளும் சாட்சிகளின்றி மறைந்து போகின்றன.
கேள்வி : பெண்கள் முகங்கொடுக்கும் உடலியல்இ உளவியல் ரீதியான பிரச்சினைகள் பொது வெளியில் பேசப்படுவதாக தெரியவில்லையே ?
பதில் : உண்மைதான். பெண்கள் சமூகத்தில் உடலியல்இ உளவியல் ரீதியாக பிரச்சினைகளை எதிர்நோக்கும்போது அல்லது பாதிக்கப்படும் போது தமது சுய மற்றும் குடும்ப கௌரவம் கருதி அதை பொது வெளியில் பேசுவதில்லை. பலர் தமது எதிர்காலத்தைக் கருதிற்கொண்டு மறைத்து அதை தமக்குள் அடக்கிக் கொள்கின்றனர். அவ்வாறு பொது வெளியில் பேச முயற்சித்தாலும் எமது சமூகத்தில் பலர் அதற்கு எதிர்மறைக் கருத்துக்களை விமர்சித்து அதை ஒரு கிசு கிசுவாக்கி காலவோட்டத்தில் அது மறைந்தும் விடுகிறது
கேள்வி : பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைக்கலாம் ?
பதில் : நடைமுறையில் சற்று கடின காரியமே. இருந்த போதிலும் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாக சட்டங்களை இறுக்கமாக உருவாக்குவதன் மூலமும் இயன்றளவு பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து குற்ற வாளியை சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலமும் பாதிக்கப்பட்டவருக்கு சார்பாகவும் வன்முறையில் ஈடுபட்டவர் மேலும் அதைத் தூண்டி யவருக்கெதிராக உரிய அரச அதிகாரிகள் அலட்சியமில்லாமல் துரித செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும்இ சமூக மட்டத்தில் இது தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் ஒரளவு இவ் வன்முறையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.
மேலும் மக்கள் பிரதிநிகள் தமது கட்சிக்குள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரிவொன்றை உருவாக்கி அதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விடயங்கள் அவர்களுக்கெதிரான துஷ்பிரயோக வன் முறைகளுக்கெதிரான செயற்பாடுகளை சமூக மட்டத்தில் முன்னெடுப்பதன் மூலம் ஒரளவு வன்முறையினை கட்டுப்படுத்த முடியும்.
கேள்வி : 54 சதவீத பெண் வாக்காளர்களைக் கொண்ட சட்டமியற்றும் பாராளுமன்றத்தில் பெண்களின் வகிபங்கு எவ்வாறுள்ளது ?
பதில் : பெண் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப் படுவதில்லை என்பதே நிதர்சன உண்மை. அரசியல் கட்சிகளில் ஆண்களின் ஆதிக்கமே செல்வாக்கு செலுத்துகிறது. சில கட்சிகள் பெயரளவில் மாத்திரமே பெண்களை உள்வாங்குகின்றனர். இதனால் பெண்களுக்கான வாய்ப்பு அதிகம் வழங்கப்படுவதில்லை. சட்டமியற்றும் நம் பாராளுமன்றத்தில் உண்மையில் பெண் பிரதிநிதித்துவத்தின் வகிபங்கு முக்கியமானதெனின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்காக குறைந்தது ஒரு ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும். உதாரணமாக ஐந்து ஆசனம் கொண்ட மாவட்டத்தில் குறைந்தது ஓன்றோ இரண்டோ ஆசனமாவது ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறிருந்தாலே தவிர பெண்களின் வகிபங்கு நமது பாராளுமன்றத்தில் குறைவாகவேயிருக்கும். அதுமட்டுமன்றி நமது சமூகத்தில் படித்த உயர் பதவிகளிலுள்ள பெண்கள் மேலும் சமூகத்தில் முன்னிலையில் உள்ள பெண்கள் சமூகத்தின் எதிர்மறை கருத்துகளுக்கு பயந்தும் எங்கே ஆதரவானவர்கள் கூட வாக்களிக்காமல் தோற்று சுய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தினாலும் தேர்தலில் இறங்குவதற்கு காட்டும் தயக்கமும் இதற்கான ஒரு காரணியாகப் பார்க்க முடியும்.
கேள்வி : வடக்கு கிழக்கு மலையகத்தில் பெண்கள் பாராளுமன்றம் செல்வதற்கான பொறிமுறையை ஏற்படுத்த வேண்டியவர்கள் ?
பதில் : அரசியலாளர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் சமூகத்தில் முன்னிலையில் உள்ள பெண்கள் சிவில் சமூக அமைப்புகள் அல்லது மதகுருமார்கள் போன்றோர் பெண்கள் பாராளுமன்றம் செல்வதற்கான பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
கேள்வி : கடந்த 2020இ பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழ் பெண் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறவில்லையே இதற்கான பின்னணி ?
பதில் : கவலைக்குரிய விடயமே. 2020 பாராளுமன்ற தேர்தலில் அறிவாளிகள் பெண்ணிய சமூக செயற்பாட்டாளர்கள் களமிறங்கிய போதும் வெற்றி பெற வில்லை. ஏனெனில் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவம் ஆண் சமூகத்தின் கட்டுப்பாட்டிலுள்ளமை சில கட்சிகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட போதிலும் பெண்கள் முன்னிலைப்படுத்தப்படாமல் பெயர ளவில் இருந்தமை ஒவ்வொருவரும் தாம் வெல்லுவதிலேயே அக்கறை காட்டு வதும் போட்டி பொறாமை மேலும் சமூகத்தில் பெண் வேட்பாளர்களுக்கான எதிர்மறை கருத்துக்கள் பெண்களே பெண்களை ஏற்றுக்கொள்ளாத நிலை போன்ற காரணங்களினால் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் பின் வாங்கப்பட்டது.
கேள்வி : மாகாண சபையில் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் போதுமானதா ?
பதில் : மாகாண சபையில் 25 வீத பெண்பிரதிநித்துவம் போதாது. ஆகக் குறைந்தது 40 வீத பெண் பிரதிநித்துவம் வேண்டும். உள்ளூராட்சியில் 50 வீதமான பெண் பிரதிநித்துவம் தேவை. அப்படியானால்தான் பாராளுமன்றத்தில் 25 வீத பெண் பிரதிநித்துவத்தையாவது எதிர்பார்க்க முடியும்.
கேள்வி : பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளை ஒழிக்க சட்டம் இயற்றும் நிலையிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பாரற்று இருப்பதாக கூறப்படுகிறதேஇ இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?
பதில் : பெண்கள் அல்லது சிறார்களுக்கு எதிரான வன்முறையோ துஷ்பிரயோகமோ அரங்கேறி பொதுவெளிக்கு வரும்போது மட்டுமே அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும் பொதுச்சபையிலும் பேசுகின்றனர். அதுவும் பிரபல அரசியல்வாதிகள் அல்லது சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ளோர் தொடர்புபட்டிருந்தால் மாத்திரமே இன்னும் பிரபலமாக எல்லா இடங்களிலும் அனைத்து சபைக்கூட்டங்களிலும் பேசப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகளுடைய பகுதிகளில் நளாந்தம் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் கவனத்திற்கொள்ளப்படுவதில்லை. சிலர் தமது அரசியல் சுய இலாபத்திற்காக கருத்துக்களையும் போராட்டங்களையும் முன்வைக்கின்றனர். உதாரணம் டயகம ஹிஷாலினியின் வழக்கு.
ஆனால் நடைமுறையில் வரும்போது வாத பிரதிவாங்கள் நோக்கத்தையும் எண்ணக்கருவையும் இல்லாமலாக்கி விடுகிறது. அல்லது புதுப்புது வேறு விடயங்கள் செல்வாக்குச் செலுத்தி பெண்கள் அல்லது சிறுவர்களுக்கெதிரான வன்முறை தொடர்பான விடயங்கள் மழுங்கடிக்கப்படுகிறது என்றார்.
நேர்கண்டவர் : பாக்கியராஜா மோகனதாஸ்.
